பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

2

போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
“வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

3

எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

4

பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!

5

ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

6

தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

7

கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

8

விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன்.
அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

9

முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

10

திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
“எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

11

வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்;
தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான்,
அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

2

செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர்
கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர்,
வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த
அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

3

நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின்
துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே!
மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும்
அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4

ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்!
வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே!
பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம்
ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

5

சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே!
விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே!
உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

6

“நீரானே! தீயானே! நெதியானே! கதியானே!
ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே!
பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்!” என்று
ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

7

கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்!
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்!
விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே!
அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

8

மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்!
பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்!
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி
அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

9

முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப்
பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த,
எத்திசையும் வானவர்கள், “எம்பெருமான்” என இறைஞ்சும்
அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

10

கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத்
திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி,
பெருவரை சூழ் வையகத்தார், “பேர் நந்தி” என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.

2

பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார்
வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

3

உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார்
அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

4

தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.

5

வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார்
கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார்
ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

6

சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

7

பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே.

8

ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

9

பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

10

இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.

2

பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி,
வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே!
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே!

3

தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே!
மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.

4

பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.

5

கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,
வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே!
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே!

6

துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்)
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி;
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே!

7

பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது;
மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை!
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!

8

மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,-
எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!-
தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!

9

குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும்,
திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப்
பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே.

10

அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று,
முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ,
அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை;
கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

2

ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

3

நரி புரி சுடலை தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை;
சுரி புரி குழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை;
தெரி புரி சிந்தையார்க்குத் தெளிவு அலால் அருளும் இல்லை-
அரி புரி மலர்கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

4

தொண்டு அலால்-துணையும் இல்லை; தோல் அலாது உடையும் இல்லை;
கண்டு அலாது அருளும் இல்லை; கலந்த பின் பிரிவது இல்லை-
“பண்டை நால்மறைகள் காணாப் பரிசினன்” என்று என்று எண்ணி,
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே.

5

எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை;
கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு,
பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்-
அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே.

6

என்பு அலால் கலனும் இல்லை; எருது அலால் ஊர்வது இல்லை;
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை;
துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும்
அன்பு அலால் பொருளும் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

7

கீள் அலால் உடையும் இல்லை; கிளர் பொறி அரவம் பைம் பூண்
தோள் அலால்-துணையும் இல்லை; தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை; மீள
ஆள் அலால் கைம்மாறு இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

8

சகம் அலாது அடிமை இல்லை; தான் அலால்-துணையும் இல்லை;
நகம் எலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி,
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து, ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

9

உமை அலாது உருவம்- இல்லை; உலகு அலாது உடையது இல்லை-
நமை எலாம் உடையர் ஆவர்; நன்மையே; தீமை இல்லை;
கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள் கொடுப்பார் -ஐயன் ஐயாறனார்க்கே.

10

மலை அலால் இருக்கை இல்லை; மதித்திடா அரக்கன் தன்னைத்
தலை அலால் நெரித்தது இல்லை; தடவரைக் கீழ் அடர்த்து;
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை-
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய்
உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

2

கூர்வித்தவா, குற்றம் நோய்வினை காட்டியும்! கூர் வித்த நோய்
ஊர்வித்தவா! உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
ஆர்வித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சேர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

3

தாக்கினவா, சலம் மேல் வினை காட்டியும்! தண்டித்த நோய்
நீக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
ஆக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
நோக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

4

தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால்
நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி
உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

5

இழிவித்த ஆறு, இட்ட நோய் வினைக் காட்டி! இடர்ப்படுத்துக்
கழிவித்தவா! கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி
அழிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொழுவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

6

இடைவித்த ஆறு, இட்ட நோய்வினை காட்டி! இடர்ப்படுத்து(வ்)
உடைவித்த ஆறு! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அடைவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

7

படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய்
அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

8

மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த நோய்
துறப்பித்தவா! துக்க நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி
இறப்பித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
சிறப்பித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

9

துயக்கினவா, துக்க நோய்வினை காட்டி! துயக்கின நோய்
இயக்கின ஆறு! இட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்து அருளி
அயக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
மயக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

10

கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள
இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள்
அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே;
பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி
அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.

2

இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என் மனத்தே
பொழித்தன; போர் எழில் கூற்றை உதைத்தன; போற்றவர்க்கு ஆய்க்
கிழித்தன, தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று
அழித்தன-ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.

3

மணி நிறம் ஒப்பன; பொன் நிறம் மன்னின; மின் இயல் வாய்
கணி நிறம் அன்ன; கயிலைப் பொருப்பன; காதல் செய்யத்
துணிவன; சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன; சேயன, தேவர்க்கு;-ஐயாறன் அடித்தலமே.

4

இருள் தரு துன்பப்படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து, உண் பொருள் நாடி, புகல் இழந்த
குருடரும் தம்மைப் பரவ, கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும்-ஐயாறன் அடித்தலமே.

5

எழுவாய் இறுவாய் இலாதன; எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன; மா நரகக் குழிவாய்
விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

6

துன்பக்கடல் இடைத் தோணித்தொழில் பூண்டு, தொண்டர் தம்மை
இன்பக்கரை முகந்து ஏற்றும் திறத்தன; மாற்று அயலே
பொன் பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப் பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

7

களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன்
தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே.

8

திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலை
வருத்திக் கடி மலர்வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்-
அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.

9

பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப, பரந்து பல்பேய்
கூடி முழவக் குவி கவிழ் கொட்ட, குறு நரிகள்
நீடும் குழல் செய்ய, வையம் நெளிய நிணப் பிணக்காட்டு
ஆடும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

10

நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா
என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.

11

மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி
நிலை ஆய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள் நிலத்துப்
புலை ஆடு புன்மை தவிர்ப்பன-பொன்னுலகம்(ம்) அளிக்கும்,
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே.

12

பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன; “போற்றி!” என்பார்
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன; பொன் அனையாள்
சிலம்பும், செறி பாடகமும், செழுங் கிண்கிணித்திரளும்,
அலம்பும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

13

உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன; ஓதி நன் நூல்
கற்றார் பரவப் பெருமை உடையன; காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்;
அற்றார்க்கு அரும்பொருள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

14

வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார்
ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு
ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச
ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

15

மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின்
மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார்
தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே.

16

பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால்
ஏணிப்படி நெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடி மேல்
மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி,
ஆணிக் கனகமும் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.

17

ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த
வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும்
சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு;
ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே.

18

சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி-அணி ஆர் வளைக்கரம் கூப்பி நின்று,
வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.

19

சுழல் ஆர் துயர்வெயில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன; என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ; காலவனம் கடந்த
அழல் ஆர் ஒளியன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.

20

வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற வரை அடர்த்து
மெலியா வலி உடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே
பலி சேர் படு கடைப் பார்த்து, பல்-நாளும் பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும்-ஐயன் ஐயாறன் அடித்தலமே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவையாறு
வ.எண் பாடல்
1

அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

2

பாடகக் கால்; கழல்கால்; பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக் கால்; நங்கைமுன் செங்கண் ஏனத்தின் பின் நடந்த
காடு அகக் கால்; கணம் கைதொழும் கால்; எம் கணாய் நின்ற கால்;
ஆடகக்கால்-அரிமால் தேர அல்லன் ஐயாற்றனவே.