பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மல்லல் நீர் ஞாலம் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்; எல்லை இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லல் ஆம் படித்து அன்று ஏனும் ஆசையால் சொல்லல் உற்றேன்.
பொன் மலைப் புலி வென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந் நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்; மன்னிய அநபாயன்; சீர் மரபின் மா நகரம் ஆகும் தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர்.
மா மதில் மஞ்சு சூழும்; மாளிகை நிரை விண் சூழும்; மணி வாயில் சூழும்; சோலையில் வாசம் சூழும்; தே மலர் அளகம் சூழும்; சில மதி தெருவில் சூழும்; தாம் மகிழ்ந்து அமரர் சூழும். சதமகன் நகரம் தாழ.
கட கரி துறையில் ஆடும்; களி மயில் புறவில் ஆடும்; அடர் மணி அரங்கில் ஆடும்; அரிவையர் குழல் வண்டு ஆடும்; படர் ஒளி மறுகில் ஆடும்; பயில் கொடி கதிர் மீது ஆடும்; தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால்.
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் பொன் இயல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில்.
பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அக் கோயில் மருள் துறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகி, இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருள் பெரும் தொண்டு செய்வார் அவர், எறிபத்தர் ஆவார்.
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழை அரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் பழை மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார்.
அண்ணலார் நிகழும் நாளில், ஆன் நிலை அடிகளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம் பூப் பறித்து அலங்கல் சாத்தி, உள் நிறை காதலோடும் ஒழுகுவார்; ஒரு நாள் முன் போல்.
வைகறை உணர்ந்து போந்து, புனல் மூழ்கி, வாயும் கட்டி, மொய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து, முன்னிக் கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலைத் தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப் பள்ளித் தாமம் கொய்து.
கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு, நெஞ்சில் வாலிய நேசம் கொண்டு, மலர்க் கையில் தண்டும் கொண்டு, அங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும் காலை, வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.
மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச் சோழனார் தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனம் ஆம் பண்பு பெற்ற வெங் களிறு, கோலம் பெருகு மா நவமி முன்னாள்.
மங்கல விழவு கொண்டு வரு நதித் துறை நீர் ஆடிப் பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் எங்கணும் இரியல் போக, எதிர் பரிக் காரர் ஓடத் துங்க மால் வரை போல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே.
வென்றி மால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும சென்று, ஒரு தெருவில் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல, வன் தனித் தண்டில் தூங்கும் மலர் கொள் பூக் கூடை தன்னைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்று, பிடித்து உடன் பறித்துச் சிந்த.
மேல் கொண்ட பாகர் கண்டு, விசை கொண்ட களிறு சண்டக் கால் கொண்டு போவார் போலக் கடிது கொண்டு அகலப் போக நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி, மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார்.
அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக, மெய்ப் பெரும் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று, செப்பு அரும் துயரம் நீடிச் செயிர்த்து, முன் சிவதா என்பார்.
‘களி யானையின் ஈர் உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!.
‘ஆறும் மதியும் அணியும் சடை மேல் ஏறும் மலரைக் கரி சிந்துவதே? வேறு உள் நினைவார் புரம் வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!.
‘தஞ்சே சரணம் புகுதும் தமியோர் நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நள்ள செஞ் சேவடியாய் சிவதா! சிவதா!.
‘நெடியோன் அறியா, நெறியார் அறியும் படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும் அடியார்களில், யான் ஆரா அணைவார்? முடியா முதலார்!’ எனவே மொழிய.
என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி, ‘மன்றவர் அடியார்க்கு என்றும் வழிப் பகை களிறே அன்றோ? கொன்று அது வீழ்ப்பன்? என்று கொலை மழு எடுத்து வந்தார்.
வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி ‘உம்மை இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது’ என்ன, ‘எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் சிந்தி, முன் பிழைத்துப் போகா நின்றது இத் தெருவே’ என்றார்.
‘இங்கு அது பிழைப்பது எங்கே இனி, என எரி வாய் சிந்தும் அங் கையின் மழுவும் தாமும் அனலும் வெங் காலும் என்னப் பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும் செங் கண் வாள் அரியின் கூடிக் கிடைத்தனர்; சீற்றம் மிக்கார்.
கண்டவர் ‘இது முன்பு அண்ணல் உரித்த அக் களிறே போலும்; அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்த துண்டித்துக் கொல்வேன்’ என்று சுடர் மழு வலத்தில் வீசிக் கொண்டு எழுந்து ஆர்த்துச் சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார்.
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சமா தாய் தலை அன்பின் முன், நிற்குமே? தகைந்து பாய்ந்து தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்.
கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக ஐவரைக் கொன்று நின்றார்; அருவரை அனைய தோளார்.
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய, மற்று உள்ளார் ஓடி மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கிப் பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும்’ என்றார்.
மற்று, அவர் மொழிந்த மாற்றம் மணிக் கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக் குரை கழல் பணிந்து நின்று, ‘பற்றலர் இலாதாய்! நின் பொன் பட்ட மால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர்’ என்றார்.
வளவனும் கேட்ட போதில் மாறு இன்றி மண் காக்கின்ற கிளர் மணித் தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க அளவு இல் சீற்றத்தினாலே ‘யார் செய்தார்’ என்றும் கேளான் இள அரி ஏறு போல, எழில் மணி வாயில் நீங்க.
தந்திரத் தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு வந்து உறச் சேனை தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற, அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப எந்திரத் தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி.
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க வல், எழும், முசலம், நேமி, மழுக் கழுக் கடை முன் ஆன பல் படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன் கண் எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும்.
சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரி வெங் குரல் பம்பை, கண்டை, வியன் துடி, திமிலை, தட்டி, பொங்கு ஒலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி நாண் மருங்கு எழுந்து இயம்பி மல்க.
தூரியத் துவைப்பும் முட்டும் சுடர்ப் படை ஒலியும் மாவின் தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர்ச் சீறும் வீரர் தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே.
பண் உறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் மண் இடை இறு கால் மேன் மேல் வந்து எழுந்தது போல் தோன்றத் தண் அளிக் கவிகை மன்னன் தானை பின் தொடரத் தான் ஓர் அண்ணல் அம் புரவி மேல்கொண்டு அரச மா வீதி சென்றான்.
கடு விசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படு களம் குறுகச் சென்றான்; பகைப் புலத்தவரைக் காணான் விடு சுடர் மழு ஒன்று ஏந்தி, வேறு இரு தடக் கைத்து ஆய அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்.
பொன் தவழ் அருவிக் குன்றம் எனப் புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவர் என்று ஓரர் ‘வென்றவர் யாவர்?’ என்றான் வெடிபட முழங்கும் சொல்லான்.
அரசன் ஆங்கு அருளிச் செய்ய, அருகு சென்று அணைந்து பாகர் ‘விரை செய்தார் மாலையோய்! நின் விறல் களிற்று எதிரே நிற்கும் திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்; பரசு முன் கொண்டு நின்ற இவர்’ எனப் பணிந்து சொன்னார்.
‘குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றிக் கொல்லார்; பிழைத்தது உண்டு’ என்று உட்கொண்டு மழை மத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன்; உலக மன்னன்.
மைத் தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரே இந்த மெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட அத் தவம் உடையேன் ஆனேன்; அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்; என் கொலோ பிழை?’ என்று அஞ்சி.
செறிந்தவர் தம்மை நீக்கி, அன்பர் முன் தொழுது சென்று ‘ஈது அறிந்திலேன்; அடியேன், அங்கு கேட்டது ஒன்று; அதுதான் நிற்க; மறிந்த இக் களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான்? அருள் செய்யும்’ என்று நின்றார்.
மன்னவன் தன்னை நோக்கி, வானவர் ஈசர் நேசர், ‘சென்னி! இத் துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன் பறித்துச் சிந்தத் தரைப் படத் துணித்து வீழ்த்தேன்’.
‘மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீது அங்குக் கடாவு வாரும் விலக்கிடது ஒழிந்து பட்டார்; ஈது இங்கு நிகழ்ந்தது’ என்றார் எறி பத்தர்; என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன்.
‘அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ் அபராதத்துக்கு இங்கு இது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று; இதுவாம்’ என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
வெந் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் ‘கெட்டேன் அந்தம் இல் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன்’ என்று தந்த வாள் வாங்க மாட்டார் தன்னைத் தான் துறக்கும் என்று சிந்தையால் உணர்வு உற்று அஞ்சி வாங்கினார்; தீங்கு தீர்ப்பார்.
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே, ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர் பால்’ என்றே ஆங்கு அவர் உவப்பக் கண்ட எறிபத்தர், அதனுக்கு அஞ்சி.
‘வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடை வாளைத் தந்து என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும்’ என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு ‘முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு’ என்று எண்ணி.
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்.
வளவனார் விடாது பற்ற. மாதவர் வருந்து கின்ற அளவு இலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக் களம் மணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப.
‘தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேல் காட்டச் செழும் திரு மலரை இன்று சினக் கரி சிந்தத் திங்கள் கொழுந்து அணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று’ என்று அங்கு எழுந்தது; பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே.
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர்; நிருபர் கோனும் போர் வடி வாளைப் போக எறிந்து அவர் கழல்கள் போற்றிப் பார்மிசைப் பணிந்தார் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்.
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங் கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள, மற்று அத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்.
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து, முட்ட வெங் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கிப் பொங்கும், பட்ட வர்த்தனத்தைக் கொண்டு, பாகரும் அணைய வந்தார்.
ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு ‘அடியனேன் களிப்ப இந்த மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்து அருளும்’ என்ன மேன்மை அப் பணி மேல் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல் யானை மேற் கொண்டு சென்றார்; இவுளி மேல் கொண்டு வந்தார்.
அந்நிலை எழுந்த சேனை. ஆர் கலி ஏழும் ஒன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப. மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப் பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொன் தாள் சென்னியில் கொண்டு. சென்னி திருவளர் கோயில் புக்கான்.
தம்பிரான் பணிமேல் கொண்டு சிவகாமியாரும் சார எம்பிரான் அன்பர் ஆன எறிபத்தர் தாமும் ‘என்னே! அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார்’ என்று செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார். உரை
மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல் உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே, நாளும் நாளும் நல்தவக் கொள்கை தாங்கி, நலம்மிகு கயிலை வெற்பில் கொற்றவர் கணத்தின் முன் ஆம் கோ முதல் தலைமை பெற்றார்.
ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும் நாளும் மற்று அவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கில் அன்றி, நீளும் இத் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்.
தேன் ஆரும் தண் பூங் கொன்றைச் செம் சடையவர் பொன் தாளில் ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் ஏனாதி நாதர் செய்த திருப் பணி இயம்பல் உற்றேன்.