பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

காரைக்கால் அம்மையார் புராணம்
வ.எண் பாடல்
1

மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனம் இல் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.

2

வங்கம் மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்.

3

வணிகர் பெருங்குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத்
தணிவு இல் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்.

4

பல் பெரு நல்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்.

5

வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதர் கொள்கையினில் குறுகினார்.

6

நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்
இல் இகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகள் பேசுதற்குத் தொடங்குவார்.

7

நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத்
தேட அருந்திருமரபில் சேயிழையை மகள் பேச
மாடம் மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்.

8

வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தை ஆம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த
பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்.

9

மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்
பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும்
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்.

10

மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கிப்
பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார்.

11

அளி மிடை தார்த் தன தத்தன் அணி மாடத்து உள் புகுந்து
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக்
களி மகிழ் சுற்றம் போற்றக் கல்யாணம் செய்தார்கள்.

12

மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள்
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன்
பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்.

13

மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு இல் தனம் கொடுத்து அதன்பின்
நிகர்ப்பு அரிய பெருஞ்சிறப்பில் நிதிபதி தன் குல மகனும்
தகைப்பு இல் பெருங் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிகப் புரியும் கொள்கை இனில் மேம் படுதல் மேவினான்.

14

ஆங்கு அவன் தன் இல் வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ்
ஓங்கிய அன்பு உறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.

15

நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம் பொன்னும் நவ மணியும் செழும் துகிலும் முதல் ஆன
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகும் நாள்.

16

பாங்கு உடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங் கனிகள் ஓர் இரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்.

17

கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதனார் வைத்து அதன்பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர்
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்.

18

வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தா இன் அடிசில் ஊட்டுவார்.

19

கறி அமுது அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே
பெறல் அரிய விருந்து ஆனால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினர் ஆய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்.

20

இல் ஆளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்.

21

மூப்பு உறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்
தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர்
வாய்ப்பு உறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்.

22

மற்று அவர் தாம் போயின பின் மனைப் பதியா அகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்
பொற்பு உற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்
கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்.

23

இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறுங்கூந்தல்
அன்னம் அனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்.

24

மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமைத் தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்.

25

அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தாள்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்த அதிமதுரக் கனி ஒன்று.

26

மற்று அதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேற் பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி அன்று மூ உலகில் பெறற்க்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்.

27

அவ் உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்.

28

செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்துற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்.

29

ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்
தேசு உடைய சடைப் பெருமான் திரு வருளேல் இன்னமும் ஓர்
ஆசு இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்.

30

பாங்கு அகன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி
ஈங்கு இது அளித்த அருளீரேல் என் உரை பொய் ஆம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்.

31

வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவுஅரும் பயம் மேல்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி குழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகும் நாளில்.

32

விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி
நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்
வடு இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்.

33

கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றிச்
சலம் தரு கடவுள் போற்றித் தலைமை ஆம் நாய்கன் தானும்
நலம் தரு நாளில் ஏறி நளி திரைக் கடல் மேல் போனான்.

34

கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்
அடைவு உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாள்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்
படர் புனல் கன்னி நாட்டு ஓர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்.

35

அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பு இல் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற
செப்ப அரும் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.

36

பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கு அனாள் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையினோடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்.

37

முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இரு நிதிக் கிழவன் என்ன எய்திய திருவின் மிக்குப்
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகு ஒளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதின் பெற்றான்.

38

மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்
தொடர்வு அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்து அவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்.

39

இந் நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக.

40

விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்
வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி
அளவு இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னாள் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே.

41

அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்.
தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்று அவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையினாளைக் கொண்டு போய் விடுவது என்றார்.

42

மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்
தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்
தே மொழி யவரும் சூழச் சேணிடைக் கழிந்து சென்றார்.

43

சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவு இல் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்.

44

வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த
பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு
முந்து உறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான்.

45

தானும் அம் மனைவி யோடும் தளர் நடை மகவி னோடும்
மான் இளம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்.

46

கணவர் தாம் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்
அணை உறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப
உணர்வு உறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்.

47

மற்று அவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நற் பெருந்தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே
பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்.

48

என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்
மன்றல் அங்குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்.

49

ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்.

50

ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி என்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்.

51

மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
தொலைவு இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்.

52

உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி.

53

ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்நாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழி படும் வழியால் வந்தார்.

54

கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவார் கூறக் கேட்டே
அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எவ் உருவாய் என் என்பார்.

55

வட திசைத் தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்
படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்.

56

தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்கு உற்றது அன்றே.

57

அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்.

58

வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
அருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.

59

அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்.

60

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.

61

கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.

62

அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத
மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து
செப்பு அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம்
நற் பதி தலையினாலே நடந்து புக்க அடைந்தார் அன்றே.

63

ஆலங்காடு அதனில் அண்டம் உற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்துத் தங்கு
மூலம் காண்பு அரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி
ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்.

64

மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்டம் மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் ஈகை என எடுத்துத் திருப் பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்.

65

மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெருஞ்சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா.

66

ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதி யார் ஆம்
போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன்.