பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பார்மண் டலத்தினிற் பன்னிரு பேரொடு மன்னிநின்ற நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே.
பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக் கோன்பயந்த மதியத் திருநுதல் பங்க னருள்பெற வைத்தஎங்கள் நிதியைப் பிரமா புரநகர் மன்னனை யென்னுடைய கதியைக் கருதவல் லோரம ராவதி காவலரே.
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா மாப்பழி வாரா வகையிருப் பேன்என்ன, மாரனென்னே! பூப்பயில் வாளிக ளஞ்சுமென் நெஞ்சரங் கப்புகுந்த; வேப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் மீண்டிரவே.
இரவும் பகலும்நின் பாதத் தலரென் வழிமுழுதும் பரவும் பரிசே யருளுகண் டாயிந்தப் பாரகத்தே விரவும் பரமத கோளரி யே!குட வெள்வளைகள் தரளஞ் சொரியுங் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே.
மன்னிய மோகச் சுவையொளி யூறோசை நாற்றமென்றிப் பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய பொன்னியல் பாடகம் கிங்கிணிப் பாத நிழல்புகுவோர் துன்னிய காஅமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே.
தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர, வண்டினஞ் சூழ வருமிவன் போலும், மயிலுகுத்த கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாவுடலம் விண்டினஞ் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.
வித்தகம் பேசி,நம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து முத்தகங் காட்டும் முறுவல்நல் லார்தம் மனம்அணைய, உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு பொத்தகம் போலும்! முதுமுலைப் பாணன் புணர்க்கின்றதே.
புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியின் சிறகொதுக்கி உணர்ந்தனர் போல விருந்தனை யால்உல கம்பரசும் குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதில் கொச்சையின்வாய் மணந்தவர் போயின ரோ?சொல்லு, வாழி! மடக்குருகே.
குருந்தலர் முல்லையங் கோவல ரேற்றின் கொலைமருப்பால் அருந்திற லாகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன் பெருந்திற மாமதில் சண்பை நகரன்ன பேரமைத்தோள் திருந்திழை ஆர்வம் . . . . . . . . . . . . முரசே.
முரசம் கரைய,முன் தோரணம் நீட, முழுநிதியின் பரிசங் கொணர்வா னமைகின் றனர்பலர்; பார்த்தினிநீ அரிசங் கணைதலென் னாமுன் கருது, அரு காசனிதன் கரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.
மொழிவது, சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள் தொழுவது, மற்றவன் தூமலர்ப் பாதங்கள்; தாமங்கமழ்ந் தெழுவது, கூந்தல் பூந்தா மரையினி யாதுகொலோ! மொழிவது, சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே.
வழிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன், கடலுடுத்த ஒலிதரு நீர்வை யகத்தை யுறையிட்ட தொத்துதிரு மலிதரு வார்பனி யாம்,மட மாதினை வாட்டுவதே.
வாட்டுவர் தத்தந் துயரை;வன் கேழலின் பின்புசென்ற வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால், தோட்டியல் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பில் காட்டிய கன்றின் கழல்திற மானவை கற்றவரே.
அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு அன்னை யருகர்தம்மைத் தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பையென்னப் பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக் கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றுங் கடிநகரே.
நகரங் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று, நான்மறைகள் பகரங் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம் மகரங் கிளர்கடல் வையம் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரானென்பர், நீணிலத்தே
நிலம் ஏறியமருப் பின்திரு மாலும், நிலம்படைத்த குலம் ஏறியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்குஞ் சலம் ஏறியமுடி தாள்கண் டிலர்,தந்தை காணவன்று நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.
நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கிஃதே போதின் மலிவய லாக்கிய கோனமர் பொற்புகலி மேதை நெடுங்கடல் வாருங் கயலோ? விலைக்குளது காதி னளவும் மிளிர்கய லோ?சொல்லு; காரிகையே.
கைம்மையி னால்நின் கழல்பர வாது,கண் டார்க்(கு)இவனோர் வன்மைய னேயென்னும் வண்ணம் நடித்து, விழுப்பொருளோ(டு) இம்மையில் யானெய்து மின்பங் கருதித் திரிதருமத் தன்மையி னேற்கும் அருளுதி யோ!சொல்லு சம்பந்தனே.
பந்தார் அணிவிரற் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க் கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர் நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுது? முன்னுஞ் சந்தார் அகலத் தருகா சனிதன் தடவரையே.
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல் நிரைகொண்டு வானோர் கடைந்ததின் நஞ்ச நிகழக்கொலொம், நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ் சுழலநொந் தோரிரவும் திரைகொண்ட டலமரு மிவ்வகல் ஞாலஞ் செறிகடலே.
கடலன்ன பொய்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத் திடநம னேவுதற் கெவ்விடத் தானிருஞ் செந்தமிழால் திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன்செந் தாமரையின் வடமன்னு நீள்முடி யானடிப் போதவை வாழ்த்தினமே.
வாழ்த்துவ தெம்பர மேயாகும், அந்தத்து வையமுந்நீர் ஆழ்த்திய காலத்து மாழா தது,வரன் சேவடியே ஏத்திய ஞானசம் பந்தற் கிடமிசைத் தும்பிகொம்பர்க் காத்திகழ் கேதகம், போதக மீனுங் கழுமலமே.
மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி நீண்முடி வண்கமலப் பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவரென்னத் தலைபயில் பூம்புனங் கொய்திடு மே?கணி யார்புலம்ப அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே.
அரும்பின அன்பில்லை; யர்ச்சனை யில்லை; யரன்நெறியே விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலன்; பொய்க்கமைந்த இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால், கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.
அடியால் அலர்மிதித் தாலரத் தம்பில் கமிர்தமின்(று)இக் கொடியா னொடும்பின் நடந்ததெவ் வா(று)அலர் கோகனதக் கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்போல் வெடியா விடுவெம் பரல்சுறு நாறு வியன்சுரத்தே.
சுரபுரத் தார்தம் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள் பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும் அரபுரத் தானடி எய்துவ னென்ப, அவனடிசேர் சிரபுரத் தானடி யாரடி யேனென்னும் திண்ணனவே.
திண்ணென வார்சென்ற நாட்டிடை யில்லைகொல்! தீந்தமிழோர் கண்ணென வோங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீன,மற் றியாம்மெலிய எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து) ஓடி எழுமுகிலே.
எழுவாள் மதியால் வெதுப்புண்(டு) அலமந் தெழுந்துவிம்மித் தொழுவாள், தனக்கின் றருளுங் கொலாந்,தொழு நீரவைகைக் குழுவா யெதிர்ந்த உறிகைப் பறிதலைக் குண்டர்தங்கள் கழுவா வுடலம் கழுவின வாக்கிய கற்பகமே.
கற்பா நறவம் மணிகொழித் துந்தும் அலைச்சிலம்பா! நற்பா மொழியெழில் ஞானசம் பந்தன் புறவமன்ன விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்(டு) இற்பா விடும்வண்ண மெண்ணுகின் றாளம்ம! வெம்மனையே.
எம்மனை யா,யெந்தை யாயென்னை யாண்டென் துயர்தவிர்த்த செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்! வெம்முனை வேலென்ன வென்ன மிளிர்ந்து வெளுத்(து) அரியேன்(று) உம்மன வோவல்ல வோவந்தெ னுள்ளத் தொளிர்வனவே.
ஒளிறு மணிப்பணி நாட்டும், உலகத்தும் உம்பருள்ளும் வெளிறு படச்சில நிற்பதுண் டே?மிண்டி மீனுகளும் அளற வயற்சண்பை நாத னமுதப் பதிகமென்னுங் களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே.
கவிக்குத் தகுவன, கண்ணுக் கினியன, கேட்கில்இன்பம் செவிக்குத் தருவன, சிந்தைக் குரியன பைந்தரளம் நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும் குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே.
கழல்கின்ற ஐங்கணை, யந்தியும். அன்றிலுங் கால்பரப்பிட்(டு) அழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்ப,வன் றாயிழைக்காச் சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய் உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ, இனிஇன் றுறுகின்றதே.
உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய தாளமு முள்ளுருகிப் பெறுகின்ற வின்பும், பிறைநுதல் முண்டமுங் கண்டவரைத் தெறுகின்ற வாறென்ன செய்தவ மோ!வந்தென் சிந்தையுள்ளே துறுகின்ற பாதன் கழுமலம் போலுந் துடியிடைக்கே.
இடையு மெழுதா தொழியலும் ஆம்;இன வண்டுகளின் புடையு மெழுதினும் பூங்குழ லொக்குமப் பொன்னனையாள் நடையும் நகையுந் தமிழா கரன்தன் புகலிநற்றேன் அடையும் மொழியு மெழுதிடின், சால அதிசயமே.
மேனாட் டமரர் தொழவிருப் பாரும், வினைப்பயன்கள் தாநாட் டருநர கிற்றளர் வாருந் தமிழர்தங்கள் கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப் பூநாட்டு அடிபணிந் தாருமல் லாத புலையருமே.
புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண் மலைமடப் பாவைக்கு மாநட மாடும் மணியையென்தன் தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா, முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந் தாளென்தன் மொய்குழலே.
குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல் கழலியல் பாதம் பணிந்தே னுனையுங் கதிரவனே! தழலியல் வெம்மை தணித்தருள் நீ;தணி யாதவெம்மை அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற வாரணங்கே.
அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை பெண்பனை யாக்கி,அமண் கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப் பிணங்கலை நீரெதி ரோடஞ் செலுத்தின, வெண்பிறையோ(டு) இணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே.
இருந்தண் புகலி,கோ லக்கா, வெழிலா வடுதுறை,சீர் பொருந்தும் அரத்துறை போனகம், தாளம்,நன் பொன்,சிவிகை அருந்திட ஒற்ற,முத் தீச்செய வேற வரனளித்த பெருந்தகை சீரினை யெம்பர மோ!நின்று பேசுவதே.
பேசுந் தகையதன் றேயின்று மன்றும் தமிழ்விரகன் தேசம் முழுதும் மழைமறந்(து) ஊண்கெடச் செந்தழற்கை ஈசன் திருவரு ளாலெழில் வீழி மிழலையின்வாய்க் காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே.
பெறுவது நிச்சயம் அஞ்சல்;நெஞ் சேபிர மாபுரத்து மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால், வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த பொறியுறு பொற்கொடி யெம்பெரு மானமர் பொன்னுலகே.
பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை, யருகர்தங்கள் தென்னாட் டரணட்ட சிங்கத் தினை,யெஞ் சிவனிவனென்(று) அந்நாள் குதலைத் திருவாய் மொழிக ளருளிச்செய்த என்னானை யைப்பணி வார்க்கில்லை, காண்க யமாலயமே.
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று, மணிகுறுக்கி வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில் மன்மதன் வில்குனித்த கோலையெப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ் சோலையைக் காழித் தலைவன் மலரின்று சூடிடினே.
சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள் கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை நீயுங் கொடும்பகைநின்(று) ஆடுதற் கேயத்த னைக்குனை யே,நின்னை யாடரவம் வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே.
மதிக்க தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித் துதிக்கத் தகுசண்பை நாதன் கருதி கடந்துழவோர் மிதிக்கக் கமலம் முகிழ்த்தண் தேனுண்டு, மிண்டிவரால் குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே.
குறுமனம் உள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன நறுமலர் மென்குழ லாயஞ்ச லெம்மூர் நகுமதிசென்(று) உறுமனை யொண்கவ ரோவியக் கிள்ளைக்கு நும்பதியிற் சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை நீட்டுவர்; சேயிழையே.
இழைவள ராகத்து ஞானசம்பந்த னிருஞ்சுருதிக் கழைவளர் குன்று கடத்தலுங் காண்பீர் கடைசியர்,நீள் முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும் மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே.
வயலார் மருகல் பதிதன்னில், வாளர வாற்கடியுண்(டு) அயலா விழுந்த அவனுக் கிரங்கி யறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தருகையி னைனென்னத் தோன்றிடும் புண்ணியமே.
புண்ணிய நாடு புகுவதற் காகப் புலனடக்கி, எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல் லாருமின் றியானெனக்கு நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க் கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே.
கருதத் தவவருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை இரதக் கிளிமொழி மாதே! கலங்கல் இவருடலம் பொருதக் கழுநிரை யாக்குவன்; நுந்தமர் போர்ப்படையேல் மருதச் சினையில் பொதும்பரு ளேறி மறைகுவனே.
மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட, வயற்கடைஞர் பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல் துறைமுழங் குங்கரி சீறி, மடங்கல் சுடர்ப்பளிங்கின் அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே.
பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப் பிறைபல் கதிர்விழுந்த வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும் மொழிக்கே விரும்பி முளரிக் கலமரு மோவியர்தம் கிழிக்கே தருமுரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே.
கீளரிக் குன்றத் தரவ முமிழ்ந்த கிளர்மணியின் வாளரிக் கும்வைகை மாண்டன ரென்பர் வயற்புகலித் தாளரிக் கும்அரி யானருள் பெற்ற பரசமய கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே.
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்றன் குன்றகஞ்சேர் வண்டக மென்மலர் வல்லியன் னீர்!வரி விற்புருவக் கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும் புண்தகக் கேழல் புகுந்ததுண் டோ?நுங்கள் பூம்புனத்தே.
புனத்தெழு கைம்மதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய், வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்,வந்து வந்தடியேன் மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொஞ்சையன்னாள் கனத்தெழு கொங்கைக ளாயல்கு லாய்த்திவர் கட்டுரையே.
கட்டது வேகொண்டு கள்ளுண்டு, நுங்கைக ளாற்துணங்கை இட்டது வேயன்றி, யெட்டனைத் தானிவ ளுள்ளுறுநோய் விட்டது வே?யன்றி வெங்குரு நாதன்றன் பங்கயத்தின் மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின், பேதை மகிழ்வுறவே.
உறவும், பொருளுமொண் போகமுங் கல்வியுங் கல்வியுற்ற துறவும், துறவிப் பயனு மெனக்குச் சுழிந்தபுனல் புறவும், பொழிலும் பொழில்சூழ் பொதும்புந் ததும்பும்வண்டின் நறவும், பொழிலெழிற் காழியர் கோன்திரு நாமங்களே.
நாமுகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல் ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி யிடிபடுக்கத் தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவம் முகையரும்பக் காமுகம் பூமுகங் காட்டிநின் றார்த்தன காரினமே.
கார்அங்(கு) அணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச் சீர்அங்(கு) அணைநற் பெருமணந் தன்னில் சிவபுரத்து, வார்அங்(கு) அணைகொங்கை மாதொடும் புக்குறும் போது,வந்தார் ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல் லால்,அவ் அரும்பதமே.
அரும்பத மாக்கு மடியரொ(டு) அஞ்சலித் தார்க்கரிய பெரும்பத மெய்தலுற் றீர்!வந் திறைஞ்சுமின், பேரரவம் வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத் தரும்பத ஞானசம் பந்தனென் னானைதன் தாளிணையே.
தாளின் சரணந் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல் கீளின் மலங்க விலங்கே புகுந்திடும், கெண்டைகளும், வாளுந் தொலைய மதர்த்திரு காதி னளவும்வந்து மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே.
நகுகின்ற முல்லைநண் ணாரெரி கண்டத்(து) அவர்கவர்ந்த மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை; விரவலரூர் புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றி; புறவமன்கைத் தகுகின்ற கோடல்கள்; அன்பரின் றெய்துவர் கார்மயிலே.
மயிலேந் தியவள்ளல் தன்னை யளிப்ப மதிபுணர்ந்த எயிலேந் தியசண்பை நாத னுலகத்(து) எதிர்பவர்யார்? குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பி னம்புதழீஇ அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே.
அண்ணல் மணிவளைத் தோளரு காசனி சண்பையன்ன பெண்ணி னமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடுபூஞ் கண்ணந் துதைந்தவண் டே!கண்ட துண்டுகொல்? தூங்கொலிநீர்த் தண்ணம் பொழிலெழிற் காசினி பூத்தமென் தாதுகளே.
தாதுகல் தோய்த்தநஞ் சந்நாசி யார்சட லம்படுத்துத் தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்; போதியிற் புத்தர்கள்! வம்மின்; புகலியர் கோனன்னநாட் காதியிட் டேற்றும் கழுத்திறம் பாடிக் களித்திடவே.
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல் வெளியுறு ஞாலம் பகலிழந் தால்,விரை யார்கமலத்(து) அளியுறு மென்மலர்த் தாதளைந்(து) ஆழி யழைப்பவரும் துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே.
தேறும் புனல்தில்லைச் சிற்றம் பலத்துச் சிறந்துவந்துள் ஊறு மமிர்தைப் பருகிட் டெழுவதொ ருட்களிப்புக் கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித் தவன்கொழுந்தேன் நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே.
நிதியுறு வாரற னின்பம்வீ டெய்துவ ரென்னவேதம் துதியுறு நீள்வயல் காழியர் கோனைத் தொழாரினைய நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச லெனவண்ண லன்றோவெனா மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.
மன்னங் கனை!செந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர் அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர் வேழத் திடைவிலங்கிப் பொன்னங் கலைசா வகையெடுத் தாற்கிவள் பூணழுந்தி இன்னந் தழும்புள வாம்பெரும் பாலுமவ் வேந்தலுக்கே.
ஏந்தும் உலகுறு வீரெழில் நீலநக் கற்குமின்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக் காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய் வேந்தின் துயர்தவிர்த் தானையெப் போதும் விரும்புமினே.
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய வின்னமிர்தம் அரும்பும் புனற்சடை யாய்உண் டருளென் றடிபணிந்த இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை யேத்துதிரேல் கரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதம் தொடர்வெளிதே.
எளிவந்த வா!வெழில் பூவரை ஞாண்,மணித் தார்தழங்கத் துளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்துணையாங் கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின் ஞான வமிர்தளித்த அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்ற னாரருளே.
அருளுந் தமிழா கர!நின் னலங்கல்தந் தென்பெயரச் சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்(து) உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு வானை யருளியன்றே மருளின் மொழிமட வாள்பெய ரென்கண் வருவிப்பதே.
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும் திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள் தருவான் தமிழா கரகரம் போற்சலம் வீசக்கண்டு வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.
மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய் தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காணிறையே மன்னார் பரிசனத் தார்மேல் புகலு மெவர்க்குமிக்க நன்னா வலர்பெரு மானரு காசனி நல்கிடவே.
நல்கென் றடியி னிணைபணி யார்;சண்பை நம்பெருமான் பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு) ஒல்கு முடம்பின ராய்,வழி தேடிட் டிடறிமுட்டிப் பில்கு மிடமறி யார்கெடு வாருறு பேய்த்தனமே.
தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்னருள்போல் மனமே புகுந்த மடக்கொடி யே!மலர் மேலிருந்த அனமே! யமிர்தக் குமுதச்செவ் வாயுங்க ளாயமென்னும் இனமே பொலியவண் டாடெழிற் சோலையு ளெய்துகவே.
உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத் தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால், பகட்டில் பொலியினும் வேண்டேன், ஒருவரைப் பாடுதலே.
பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான் நாடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக் கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே.
வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி, மனைப்புறத்து நிலையெத் தனைபொழு தோகண்ட(து) ஊரனை நீதிகெட்டார் குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன சிலையொத்த வாள்நுதல்! முன்போல் மலர்க திருக்கண்களே.
கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால் பண்ணார் தரப்பாடு சண்பையர் கோன்பாணி நொந்திடுமென்(று) எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன் தாளங்க ளீயக்கண்டும் மண்ணார் சிலர்சண்பை நாதனை யேத்தார் வருந்துவதே.
வருந்துங் கொலாங்கழல், மண்மிசை யேகிடில் என்றுமென்றார்த் திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள் பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்;புண ரித்திகழ்நஞ்(சு) அருந்தும் பிரான்நம் மரத்துறை மேய வரும்பொருளே.
பொருளென வென்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்(கு) அருளிய சீர்த்திரு ஞானசம் பந்த னருளிலர்போல் வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின் திரளினை யாதரித் தால்நன்று சாலவென் சிந்தனைக்கே.
சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும் எந்தையைப் பாட லிசைத்துத் தொலையா நிதியமெய்தித் தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல் நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந் தேகரம் நீட்டுவரே.
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித் தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரின் வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு) உண்ணீ ருணக்குழித்த காட்டுவ ரூறல் பருகும் கொலாமெம் கனங்குழையே.
குழைக்கின்ற கொன்றைபொன் போல மலர,நுங் கூட்டமெல்லாம் அழைக்கின்ற கொண்ட லியம்புஒன் றிலையகன் றார்வரவு பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்(து) இழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே.
கொடித்தே ரவுணர் குழாமன லூட்டிய குன்றவில்லி அடித்தேர் கருத்தி னருகா சனியை யணியிழையார் முடித்தேர் கமலம் கவர்வான், முரிபுரு வச்சிலையால் வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே
வளைபடு தண்கடற் கொச்சை வயவன் மலர்க்கழற்கே வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரில்அம்கு வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறுமிந்த வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே.
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி, முறைவழுவா(து) எத்தனை காலம்நின்று ஏத்து மவரினு மென்பணிந்த பித்தனை, யெங்கள் பிரானை, யணைவ தெளிதுகண்டீர்; அத்தனை, ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே.
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினைஅன்(று) உடைத்தது பாணன்தன் யாழி னொலியை; யுரகவிடம் துடைத்தது; தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய் படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே.
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதமென்று தணிபடு மின்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழலுமிழ்கான் மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல் துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே.
தோன்றல்தன் னோடுட னேகிய சுந்தரப் பூண்முலையை ஈன்றவ ரேயிந்த வேந்திழை யார் இவ்வளவில் வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே.
பொருந்திய ஞானத் தமிழா கரன்பதி, பொற்புரிசை திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால் கருந்தடம் நீரெழு காலையிற் காகூ கழுமலமென்(று) இருந்திட வாமென்று வானவ ராகி யியங்கியதே.
இயலா தனபல சிந்தைய ராயிய லுங்கொலென்று முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழியழுந்திச் செயலார் வரைமதிற் காழியர் கோன்திரு நாமங்களுக்(கு) அயலா ரெனப்பல காலங்கள் போக்குவ ராதர்களே.
ஆதர வும்,பயப் பும்மிவ ளெய்தின னென்றயலார் மாத ரவஞ்சொல்லி யென்னை நகுவது! மாமறையின் ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே தீதர வம்பட வன்னையென் னோபல செப்புவதே.
செப்பிய வென்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால் ஒப்புடை மாலைத் தமிழா கரனை, யுணர்வுடையோர் கற்புடை வாய்மொழி யேத்தும் படி,கத றிட்டிவர மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே.
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமணைப் பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினையறுக்கும் கண்ணைக் கதியைத் தமிழா கரனை,யெங் கற்பகத்தைத் திண்ணற் றொடையற் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.
சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யானுரைத்த பேருந் தமிழ்ப்பா வினவவல் லவர்பெற்ற வின்புலகங் காருந் திருமிடற் றாயரு ளாயென்று கைதொழுவர் நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே.
பிரமா புரம்வெங் குரு,சண்பை, தோணி, புகலி,கொச்சை சிரமார் புரம்,நற் புறவந், தராய்,காழி, வேணுபுரம் வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க பரமார் கழுமலம் பன்னிரு நாமமிப் பாரகத்தே.
பாரகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும் ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின் தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன் நாமஞ் செவிக்கிசையா நாள்.