பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழிபொழி செம்தீ
வரும் நாட்டத் திருநுதலார் மகிழ்ந்து அருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர் தம் களி காட்டும் காவேரித்
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக் குடி ஆகும்.

2

நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்
பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார்.

3

ஆயுள் வேதக் கலையும் அலகு இல் வடநூல் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால்
பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையினும் மேதினி இல் மேல் ஆனார்.

4

உள்ளம் நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ளம் மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார்.

5

ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே
ஆசு இல் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப்
பூசல் முனைக் களிறு உகைத்துப் போர் வென்று பொரும் அரசர்
தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார்.

6

மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன் நகரம் துகள் ஆகத் துளைநெடும் கை வரை உகைத்துப்
பன் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
இன்னை எண் இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்.

7

கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்கள் உரைப்பார்
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால்
எதிர் இவருக்கு இவ் உலகில் இல்லை என எடுத்து உரைத்தார்.

8

தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்;
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெரு உற்று
எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்.

9

இறைஞ் சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்த
திறம் புரிவேன் அதற்கு என்னோ ? தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு
நிறைந்த நிதிக்குவைகள் உடன் நீடு விருத்திகள் அளித்தே
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான்.

10

உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்
எம் உடைய மனக் கருத்துக்கு இனிது ஆக இசைந்து உமது
மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான்.

11

மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்து
பன்னு புகழ்ப் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ்
சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார்.

12

வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத்
தீது இல் குடிப் பிறந்த திருவெண்காட்டு நங்கை எனும்
காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்.

13

நறை இதழித் திரு முடியார் அடியாரை நாள் தோறும்
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டிப் பின் உண்ணும்
நிறை உடைய பெருவிருப்பால் நியதி ஆகக் கொள்ளும்
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார்.

14

தூய திரு அமுது கனி கன்னல் அறுசுவைக் கறிநெய்
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம்
மேய படி ஆல் அமுது செய்விக்க இசைந்து அடியார்
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர் பால் மனம் மகிழ்ந்தார்

15

சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த
நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால்
மே தகையார் அவர் முன்புமிகச் சிறியர் ஆய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்.

16

கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர
உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழுவு இன்றி
எண் இல் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண்.

17

நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின்
வேர் ஆகி விளங்கு திரு வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்.

18

அருமை இனில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த
பெருமை இனில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்று
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத்
திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப.

19

மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப
அங் கணர் தம் சீர் அடியார்க்கு அளவு இறந்த நிதி அளித்துத்
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும்
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணிபுனைந்தார்.

20

ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர் தாம்
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறைப் பாராட்டுச்
சீர் பெருகச் செய்ய வளர் திருமகனார் சீறு அடியில்
தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார்.

21

சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பை
மருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில்
பொருவு இல் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை
தெருவு இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார்.

22

வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
சிந்தை மலர் சொல் தெளிவில் செழும் கலைகள் பயிலத்தம்
பந்தம் அற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார்.

23

அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள
முண்ஆக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்
பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலி காவலனார்தம்
நல் நாமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்.

24

சண்பையர் தம் பெருமானும் தாங்கு அரிய பெருங் காதல்
பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்து
நண்பு அருளி எழுந்து அருளத் தாம் இனிது நயப்பு உற்றார்.

25

இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை
அத்தர் திரு அடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய
மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம்
சித்தம் மகிழ் வயிரவர் ஆய்த் திருமலையின் நின்று அணைகின்றார்.

26

மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக்
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேகச் சுருள் போல்
தொடர் பங்கிச் சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி.

27

அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை
மஞ்சின் இடைஎழுந்த வான மீன் பரப்பு என்னப்
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்பத்
துஞ்சின் நுனித் தனிப் பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற.

28

அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம் பிறை தன்னைப்
பெருகு சிறுமதி ஆக்கிப் பெயர்த்துச் சாத்தியது என்ன
விரிசுடர்ச் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த்
திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப் பொட்டுத் திகழ்ந்து இலங்க.

29

வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்
அவ் அனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகை
வவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள்
செவ்அரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க.

30

களம் கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுத குமிழி நிரைத்து
துளங்கு ஒளி வெண் திரள் கோவைத் தூய வடம் அணிந்தது என
உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருக
விளங்கும் திருக் கழுத்தின் இடைவெண் பளிங்கின் வடம் திகழ.

31

செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப்
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது எனத்
தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்து அது சாத்து
அம் பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணி விளங்க.

32

மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது என
அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்
கைக்கு அணி கொள் வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும்
தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க.

33

பொருவு இல் திருத் தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும்
பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர்
வரும் அன்பின் வழிநிற்பீர் என மறைபூண்டு அறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப.

34

அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்த
வயங்கு ஒலி மூஇலைச்சூலம் மணித்திருத் தோள்மிசைப் பொலியத்
தயங்கு சுடர் வலத்திருக்கைத் தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட.

35

அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப்
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப்புவி ஏத்தத்
தெருள் பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டங் குடிச்சேர்ந்தார்.

36

தண்டாதது ஒரு வேட்கைப் பசி உடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத் தொண்டர் மனை வினவிக் கடிது அணைந்து
தொண்டு ஆனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்
வண்டுஆர் பூந் தாரார் இம் மனைக்கு உள்ளாரோ ? என்ன.

37

வந்து அணைந்து வினவுவார் மாதவரே யாம் என்று
சந்தனம் ஆம் தையலார் முன்வந்து தாள் வணங்கி
அந்தம் இல் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார்
எம்தமை ஆள் உடையவரே! அகத்துள் எழுந்து அருளும் என.

38

மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த
இடவகையில் தனி புகுதோம் என்று அருள அதுகேட்டு
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக்
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி.

39

அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு
எம் பெருமான் யாவரையும் கண்டிலர் தேடிப் போனார்;
வம்பென நீர் எழுந்து அருளி வரும் திருவேடம் கண்டால்
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வர் இனித்தாழார்

40

இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்ன
ஒப்பு இல் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம்
செப்பு அரும் சீர்ச் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்
எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி.

41

கண்நுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண்
வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம்; மற்று அவர்தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார்.

42

நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது
சீர் ஆர் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும்
பார் ஆதரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார்.

43

அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய்? என்ன அவர் மொழிவார்,
வடி சேர் சூல கபாலத்தார்; வட தேசத்தோம் என்றார்; வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்; யாம் சொல்ல இங்கும் இராதே போய்க்
கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து.

44

என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்திச்
சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமை நோக்கி, நீரோ பெரிய சிறுத்தொண்டர் ?
என்று திருவாய் மலர்ந்து அருள இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார்.

45

பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வர்; நான் என்று,
கோது இல் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில்
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன்.

46

அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என
நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர்! உமைக் காணும்
படியால் வந்தோம்; உத்தரா பதியோம்; எம்மைப் பரிந்து ஊட்ட
முடியாது; உமக்குச் செய்கை அரிது; ஒண்ணாது என்று மொழிந்து அருள.

47

எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக்
கண்ணார் வேடம் நிறை தவத்தீர்! அருளிச் செய்யும் கடிது அமைக்கத்
தண் ஆர் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேட
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார்.

48

அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம்
புரியும் தொண்டீர்! மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது
உரிய நாளும் அதற்கு இன்று ஆல்; ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்.

49

சால நன்று! முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது என
ஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக்
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார்.

50

பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர்! நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசு ஆம்
உண்பது ஐஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்.

51

யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என
நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்
தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே
ஏதம் இன்றி அமைத்த கறி ஆம் இட்டு உண்பது என மொழிந்தார்.

52

அதுவும் முனைவர் மொழிந்து அருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்கு
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்யப் பெறில் என்று
கதும் என் விரைவில் அவர் அவர் இசையப் பெற்றுக் களிப்பால் காதலொடு
மதுமென் கமல மலர்ப் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார்.

53

அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மை
முன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சிப்
பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ.

54

வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம்
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனும் ஆய்க்
கொள்ளும் பிராயம் ஐந்து உளன் ஆய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார்.

55

அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்
பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு
உரிய வகையில் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு
வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு ? என்று வணங்குதலும்.

56

மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று
தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாமே
எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழைப்போம் யாம் என்றார்.

57

என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர்
இன்று தாழாது அமுது செய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம்
நன்று காண்பது என நயந்து நம்மைக் காக்க வரும் மணியைச்
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார்.

58

காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனை
ஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினார் போல
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழிப் புதல்வன்
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார்.

59

பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்பப்
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்துப் பியலின் மேல்
கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர்
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி.

60

குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகள் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப்
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டி
எஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக் கொடுத்தார்.

61

அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார்; மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார்;
பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார்.

62

ஒன்று மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழும் கலங்கள்
நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை
வென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த் தாயர்.

63

இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும்
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத்
தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்.

64

பொரு இல் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்து
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார்
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார்.

65

அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டுக்
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார்.

66

மட்டு விரி பூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச்
சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார்.

67

உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைத்த அதற்கு
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூர
விடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மென் மலரின்
புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார்.

68

அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீர் இங்கு அமுது செய்ய வேண்டும் என்று நான் பரிவு
பண்ணினேன் ஆய்ப் பசித்து அருளத் தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்து அருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார்.

69

இறையும் தாழாது எழுந்து அருளி அமுது செய்யும் என்று இறைஞ்சக்
கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்! போதும் என்ன நிதி இரண்டும்
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார்.

70

வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரை
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச்
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்த
கந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த.

71

தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கி
ஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம்
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்.

72

பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சிப் பயிரவர் ஆம்
புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின்
வனிதை யாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம்
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க என.

73

பரிசு விளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றித்
தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போன கமும் கறி அமுதும்
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல்
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார்.

74

சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எல்லாம் கொண்டு
மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது எனக் கழித்தோம
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார்.

75

சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனையாரோடும் திகைத்து அயரச்
சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சி
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார்.

76

வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத் தொண்டரை நோக்கி
ஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இப்
பாங்கு நின்றார் தமைக் கொணர் வீர் என்று பரமர் பணித்து அருள
ஏங்கிக் கெட்டேன் அமுது செய இடையூறு இதுவோ என நினைவார்.

77

அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து
முகத்தில் வாட்டம் மிகப் பெருகப் பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார்
இகத்தும் பரத்தும் இனி யாரைக் காணேன் யானும் திருநீறு
சகத்தில் இடுவார் தமைக் கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச.

78

உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ! உண்பீர் நீர் என்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்தி
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார்
தம்மை ஊட்ட வேண்டி, அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி.

79

ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் ? நம் உடன் துய்ப்ப
மாறுஇல் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என
ஈறும் முதலும் இல்லாதாக்கு இப்போது உதவான் அவன் என்றார்.

80

நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர்
தாம் அங்கு அருளிச் செயத் தரியார் தலைவர் அமுது செய்து அருள
யாம் இங்கு என் செய்தால் ஆகும் ? என்பார் விரைவு உற்று எழுந்து அருளால்
பூ மென் குழலார் தம் மோடும் புறம் போய் அழைக்கப் புகும் பொழுது.

81

வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்
செய்ய மணியே! சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட.

82

பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த
தரம் இல் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம்
கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார்
புரம் மூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால்.

83

வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்
முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச்
சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார்; வீழ்ந்தார்; தெருமந்தார்;
வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார்; வெரு உற்றார்.

84

செய்ய மேனிக் கரும் குஞ்சிச் செழும் கஞ்சுகத்துப் பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே ? எனத் தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த
தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்.

85

தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர்
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதல் ஆய் உள்ளோர் போற்றி இசைப்ப
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப்
பனி வெண் திங்கள் முடி துளங்கப் பரந்த கருணை நோக்கு அளித்தார்.

86

அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார்; எழுந்தார்; ஏத்தினார்.
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார்.

87

கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங் கமலச் சேவடிக் கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்.

88

ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா
ஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப்
பேறு பெற்றார் சே வடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள்
வேறு கழறிற்று அறிவார் தம் பெருமை தொழுது விளம்புவாம்.