பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நாலிதழ் ஆறில் விர்ந்தது தொண்ணூறு தான் இதழ் ஆனவை நாற்பத்து நால் உள பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த் தான் இதழ் ஆகித் தரித்து இருந்தாளே.
தரித்து இருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி விரித்து இருந்தாள் அவள் வேதப் பொருளைக் குறித்து இருந்தாள் அவள் கூறிய ஐந்து மறித்து இருந்தாள் அவள் மாது நல்லாளே.
மாது நல்லாளும் மணாளன் இருந்திடப் பாதி நல்லாளும் பகவனும் ஆனது சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிர் ஏல் வேதனை தீர் தரும் வெள்ளடை ஆமே.
வெள் அடையான் இரு மா மிகு மா மலர்க் கள் அடையார் அக் கமழ் குழலார் மன மள் அடையானும் வகைத் திறம் ஆய் நின்ற பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே.
பெண் ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை பெண் இடை ஆணும் பிறந்து கிடந்தது பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற பெண் உடை ஆண் இடைப் பேச்சு அற்ற வாறே.
பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெரும் தகை மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம் காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே.
ஆலிக்கும் கன்னி அரிவை மனோன் மணி பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும் வேலைத் தலைவியை வேத முதல்வியை ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே.
உகந்து நின்றான் நம்பி ஒள் நுதல் கண்ணோடு உகந்து நின்றான் நம் முழை புக நோக்கி உகந்து நின்றான் இவ் உலகங்கள் எல்லாம் உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே.
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத் தொத்த கருத்து அது சொல்ல கிலேனே.
சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம் சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள் வெல்ல ஒண்ணாத வினைத் தனி நாயகி மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே.
தானே இரு நிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழை பொழி தையலும் ஆய் நிற்கும் தானே வடவரைத் தண் கடல் கண்ணே.
கண் உடையாளைக் கலந்து அங்கு இருந்தவர் மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணாப் பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர் விண் உடையார்களை மேல் உறக் கண்டே.
கண்டு எண் திசையும் கலந்து வரும் கன்னி பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும் விண்டு எண் திசையும் விரைமலர் கைக் கொண்டு தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே.
கன்னி ஒளி என நின்ற இச் சந்திரன் மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம் சென்னி இருப்பிடம் சேர் பதினாறு உடன் பன்னி இருப்பப் பராசத்தி ஆமே.
பரா சத்தி என்று என்று பல் வகையாலும் தரா சத்தி ஆன தலைப் பிரமாணி இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே.
உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்து ஒரு காலத்துப் போகம் அதுஆதி இணைந்து பரம் என்று இசைந்து இது தானே.
இது அப் பெருந்தகை எம்பெருமானும் பொது அக் கல்வியும் போகமும் ஆகி மதுவக் குழலி மனோன்மணி மங்கை அது அக் கல்வியுள் ஆயுழி யோகமே.
யோக நல் சத்தி ஒளி பீடம் தான் ஆகும் யோக நல் சத்தி ஒளி முகம் தெற்கு ஆகும் யோக நல் சத்தி உதர நடு ஆகும் யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே.
தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற வார்ந்து எழு மாயையும் மந்தம் அதாய் நிற்கும் ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிடக் கூர்ந்து எழு கின்றனள் கோல்வளைதானே.
தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை தான் ஆன ஆறும் ஈர் ஏழும் சமகலை தான் ஆன விந்து சகமே பரம் எனும் தான் ஆம் பரவாதனை எனத் தக்கதே.
தக்க பராவித்தை தான் இருபான் ஏழில் தக்கு எழு ஓரும் திரம் சொல்லச் சொல்லவே மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக் கண்ணி தொக்க கதையோடு தொல் முத்திரை யாளே.
முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ் ஞானத்தாள் தத்துவமாய் அல்ல வாய சகலத்தாள் வைத்த பராபரனாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.
கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பைக் குலாம் கன்னி பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள் அங்குச பாசம் எனும் அகிலம் கனி தங்கும் அவள் மனை தான் அறிவாயே.
வாயும் மனமும் கடந்த மனோன்மணி பேயும் கணமும் பெரிது உடைப் பெண் பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரசனுக்குத் தாயும் மகளும் தாரமும் ஆமே.
தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள் காரண காரியம் ஆகும் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பார் அளவாம் திசை பத்து உடையாளே.
பத்து முகம் உடையாள் நம் பராசத்தி வைத்தனள் ஆறு அங்க நாலுடன் தான் வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள் எம் நேர் இழை கூறே.
கூறிய கன்னி குலாய புருவத்தள் சீறியள் ஆய் உலகு ஏழும் திகழ்ந்தவள் ஆரிய நங்கை அமுத பயோதரி பேர் உயிர் ஆளி பிறிவு அறுத்தாளே.
பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை குறி ஒன்றி நின்றிடும் கோமளக் கொம்பு பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே அறிவு ஒன்ற நின்றனள் ஆர் உயிர் உள்ளே.
உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர் தம் கள்ளத்தை நீக்கிக் கலந்து உடனே புல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.
புரிந்து அருள் செய்கின்ற போகமா சத்தி இருந்து அருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து இருந்த இலக்கில் இனிது இருந்தாளே.
இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவித் திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி நிரந்தரம் ஆகிய நிரதி சய மொடு பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே.
அது இது என்னும் அவாவினை நீக்கித் துதி அது செய்து சுழி உற நோக்கில் விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும் மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே.
மூன்று மண்டலம் மோகினி சேர்விடம் என்று உள ஈராறு எழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை ஏன்றனள் ஏழ் இரண்டு இந்துவொடு ஈறே.
இந்துவினின்று எழு நாதம் இரவி போல் வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் உந்திய சோதி இதயத்து எழும் ஒலி இந்துவின் மேல் உற்ற ஈறு அது தானே.
ஈறு அது தான் முதல் எண் இரண்டு ஆயிரம் மாறுதல் இன்றி மனோ வசமாய் எழில் தூறு அது செய்யும் சுகந்தச் சுழி அது பேறு அது செய்து பிறந்து இருந்தாளே.
இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாகத் திருந்திய ஆனந்தம் செல் நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே.
மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்கு செய்தாரே.
சடங்கு அது செய்து தவம் புரிவார்கள் கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில் தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே.
பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும் ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி சீலத்தை நீக்கத் திகழ்ந்து எழு மந்திரம் மூலத்து மேல் அது முத்து அது ஆமே.
முத்து வதனத்தி முகம் தொறும் முக் கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே.
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி தாவிய நல் பதத் தண் மதியம் கதிர் மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார் ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே.
உள் ஒளி மூ இரண்டு ஓங்கிய அங்கங்கள் வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும் கள் அவிழ் கோதைக் கலந்து உடனே நிற்கும் கொள்ள விசுத்திக் கொடி அமுதம் ஆமே.
கொடிய திரேகை குருஉள் இருப்பப் படி அதுவார் உனைப் பைங் கழல் ஈசன் வடிவு அது ஆனந்தம் வந்து முறையே இடு முதல் ஆறு அங்கம் ஏந்திழையாளே.
ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும் காந்தாரம் ஆறும் கலை முதல் ஈர் எட்டும் ஆந்தக் குளத்தியும் மந்திரர் ஆயவும் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
சத்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை முத்திக்கு நாயகி என்பது அறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்த அப்பாவிகள் கத்திய நாய் போல் கதறு கின்றாரே.
ஆரே திருவின் திருவடி காண்பார்கள் நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக் கார் ஏர் குழலி கமல மலர் அன்ன சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே.
சிந்தையில் வைத்துச் சிராதியிலே வைத்து முந்தையில் வைத்துத் தம் மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவு அதிலே வைத்துச் சந்தையில் வைத்துச் சமாதி செய்வீரே.
சமாதி செய்வார் கட்குத் தான் முதல் ஆகிச் சிவாதி இலாரும் சிலை நுதலாளை நவாதியில் ஆக நயந்து அது ஓதில் உவாதி அவளுக்குறைவில தாமே.
உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாள்தொரு நண்ணி மறையுடனே நிற்கும் மற்றுள்ள நான்கும் இறை தினைப் போதினில் எய்திடல் ஆமே.
எய்திடல் ஆகும் இருவினையின் பயன் கொய் தளிர் மேனிக் குமரி குலாம் கன்னி மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு கை தவம் இன்றிக் கருத்து உறும் வாறே.
கருத்து உறும் காலம் கருதும் மனமும் திருத்தி இருந்தவை சேரும் நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண்மேல் இருத்திடும் எண் குணம் எய்தலும் ஆகுமே.
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என ஓம என்று ஓதி எம் உள் ஒளியாய் நிற்கும் தாம நறும் குழல் தையலைக் கண்ட பின் சோம நறு மலர் சூடி நின்றாளே.
சூடிடும் அங்குச பாசத் துளை வழி கூடும் இருவளைக் கோலக்கை குண்டிகை நாடும் இருபத நல் நெடு ருத்திரம் ஆடிடும் சீர்புனை ஆடகம் ஆமே.
ஆம் அயன் மலரான் ஈசன் சதா சிவன் தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம் காமனும் சாமன் இரவி கனல் உடன் சோமனும் வந்து அடி சூட நின்றாளே.
சூடும் இளம் பிறை சூலி கபாலினி நீடும் இளம் கொடி நின் மலி நேர் இழை நாடி நடு இடை ஞானம் உருவ நின்று ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே.
அண்டம் முதலாய் அவனி பரியந்தம் கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது கண்டனும் கண்டியும் ஆகிய காரணம் குண்டிகை கோளிகை கண்ட அதனாலே.
ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம் சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும் கோலி வந்து எய்தும் குவிந்த பதவை யோடு ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே.
மேல் ஆம் அரும்தவம் மேல் மேலும் வந்து எய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்து இடை நாலா நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் மேல் ஆம் எழுத்தினள் ஆம் மத்தினாளே.
ஆமத்து இனிது இருந்தன்ன மயத்தினள் ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள் நாம நமசிவ என்று இருப்பார்க்கு நேமத் துணைவி நிலாவி நின்றாளே.
நிலா மயம் ஆகிய நீள் படிகத்தின் சிலா மயம் ஆகும் செழும் தரளத்தின் சுலா மயம் ஆகும் சுரிகுழல் கோதை கலா மயம் ஆகக் கலந்து நின்றாளே.
கலந்து நின்றாள் கன்னி காதலனோடும் கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம் கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம் கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே.
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி ஒன்று ஆகும் கூட இழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம் அது ஆமே.
பாகம் பரா சத்தி பைம் பொன் சடை முடி ஏகம் இருதயம் ஈர் ஐந்து திண்புய மோக முகம் ஐந்து முக் கண் முகம் தொறும் நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே.
நாதனும் நால் ஒன்பதின்மரும் கூடி நின்று ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை வேதனும் ஈர் ஒன்பதின்மரும் மேவி நின்று ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே.
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் ஆகி நின்றாள் உடன் ஆகிய சக்கரத்து ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே.
ஆய் இழையாள் ஒடும் ஆதிப் பரம் இடம் ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள ஆய மனம் தொறும் அறுமுகம் அவை தனில் ஏய வார் குழலி இனிது நின்றாளே.
நின்றனள் நேர் இழையோடு உடன் நேர்பட இன்று என் அகம் படி ஏழும் உயிர்ப்பு எய்தும் துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழல் உள் ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே.
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே மணந்து எழும் ஆம் கதி ஆகியது ஆகும் குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடிக் கணந்து எழும் காணும் அக் காமுகை ஆமே.
ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும் மா மது மண்டலம் மாருதம் ஆதியும் ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிடக் கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே.
ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும் ஆகும் பரா பரையோடு அப்பரையவள் ஆகும் அவள் ஐங் கருமத்தள் தானே.
தான் இகழ் மோகினி சார்வான யோகினி போன மயம் உடையார் அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து ஆனாம் பரசிவம் மேலது தானே.
தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன் ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு மோனையில் வைத்து மொழி தரு கூறது ஆனவை ஓம் எனும் அவ் உயிர் மார்க்கமே.
மார்க்கங்கள் ஈன்ற மனோன் மணி மங்கலி யார்க்கும் அறிய அரியவள் ஆகும் வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட நோக்கும் பெருமைக்கு நுண் அறிவு ஆமே.
நுண் அறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்குப் பின் அறிவு ஆகும் பிரான் அறி அத்தடம் செந் நெறி ஆகும் சிவ கதி சேர்வார்க்குத் தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே.
சன்மார்க்கம் ஆகச் சமைதரு மார்க்கமும் துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும் நன்மார்க்கத் தேவரும் நல்நெறி ஆவதும் சன்மார்க்கத் தேவியும் சத்தி என்பாளே.
சத்தியும் நானும் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்தக்கால் மத்தில் ஏற வழி அதுவாமே.
அது இது என்ற அவமே கழியாதே மது விரி பூங் குழல் மங்கை நல்லாளைப் பதி மது மேவிப் பணிய வல்லார்க்கு விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே.
வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும் வென்றிடல் ஆகும் வினைப் பெரும் பாசத்தை வென்றிடல் ஆகும் விழை புலன் தன்னையும் வென்றிடு மங்கை தன் மெய் உணர்வோர்க்கே.
ஓர் ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரம் இது மாரம் குழலாளும் அப்பதி தானும் முன் சாரும் பதம் இது சத்தியம் ஆமே.
சத்தியி னோடு சயம்புவும் நேர் படில் வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும் சித்தது மேவித் திருந்திடுவாரே.
திருந்து சிவனும் சிலைநுதலாளும் பொருந்திய வானவர் போற்றி செய்து ஏத்த அருந்திட அவ்விடம் ஆரமுதாக இருந்தனள் தான் அங்கு இளம் பிறை என்றே.
என்றும் எழுகின்ற வேரினை எய்தினார் அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு மன் தரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதி நின்றாளே.
நின்றனள் நேர் இழையா ளொடு நேர்பட ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே.
தோன்றிடும் வேண்டு உரு ஆகிய தூய் நெறி ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல்கலை மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர் சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே.
ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் சேய அரிவை சிவ ஆனந்த சுந்தரி நேயம் அதா நெறி ஆகி நின்றாளே.
நெறி அதுவாய் நின்ற நேர் இழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும் குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே.
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிடத் தேம் மயம் ஆளும் தெனாது என என்றிடும், மா மயம் ஆனது வந்து எய்தலாமே.
வந்து அடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதல் ஆக எண் திசையோர் களும் கொந்து அணியும் குழலாள் ஒடு கோனையும் வந்தனை செய்யும் வழி நவில் வீரே.
நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்து எரிதீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக் கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனைதானே.
தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு இலி பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர் அற் கொடி மாது உமையார் அத் தலைமகள் நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை வில் கொடி மாதை விரும்பி விளங்கே.
விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை துளங்கு பரா சத்தி தூங்கு இருள் நீங்கக் களம் கொள் மணியுடன் காம வினோதம் உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை ஒடுங்கி உமை யொடும் ஓர் உரு ஆமே.
உருவம் பல உயிராய் வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர் உற நாடில் புரிவளைக் கைச்சி எம் பொன் அணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
மாயம் புணர்க்கும் வளர் சடையான் அடித் தாயம் புணர்க்கும் சல நதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி ஆயம் புணர்க்கும் அவ் யோனியும் ஆமே.
உணர்ந்து ஒழிந்தேன் அவன் ஆம் எங்கள் ஈசனை புணர்ந்து ஒழிந்தேன் புவனா பதியாரை அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்து ஒழிந்தேன் தன் அருள் பெற்றவாறே.
பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள் இறைவனே நன்பயனே என்பர் கற்றான் அறியும் கருத்து அறிவார் கட்குப் பொன்தான் உலகம் புகல் தனியாமே.
தனி நாயகன் தனோடு என் நெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி கனியாய் நினைவது என் காரணம் அம்மையே.
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும் இம்மனை செய்த இந் நில மங்கையும் அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே
அம்மையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை அம்மே யோடு அத்தனும் யானும் உடன் இருந்து அம்மை யொடு அத்தனை யான் புரிந்தேனே.