பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பூந்தராய்
வ.எண் பாடல்
1

செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?

2

எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்
சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? பெருமானிரே!

3

சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்புஅதே?

4

சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,
சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்
காமன் வெண்பொடிஆகக் கடைக்கண் சிவந்ததே?

5

பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகுவாயன
புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்,
துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர்
வெள்ளநீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்புஅதே?

6

மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடுஉடன் வைத்ததே?

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

8

வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,
துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?

9

வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்
கரிய மால், அயன், நேடி உமைக் கண்டிலாமையே?

10

வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய்,
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல்கழலீர்! சொலீர்
குண்டர்சாக்கியர் கூறியது ஆம் குறிஇன்மையே?

11

மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.

2

நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற
பெம்மானை, பேய் உடன் ஆடல் புரிந்தானை,
அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடை இல்லையே.

3

அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்;
பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!

4

புற்றானை, புற்று அரவம் அரையின்மிசைக்
சுற்றானை, தொண்டு செய்வார் அவர்தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர் கோயில்
பற்றானை, பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

5

நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம்
விதியானை, விண்ணவர்தாம் வியந்து ஏத்திய
கதியானை, கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை, பாடுமின், நும் வினை பாறவே!

6

செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி
வைப்பானை, வார் கழல் ஏத்தி நினைவார்தம்
ஒப்பானை, ஓதம் உலாவு கடல் காழி
மெய்ப்பானை, மேவிய மாந்தர் வியந்தாரே.

7

துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை, ஏழ் இசையின் நிலை பேணுவார்
அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய
நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.

8

குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும்
வென்றானை, மென்மலரானொடு மால் தேட
நின்றானை, நேரிழையாளொடும் காழியுள
நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல் அவை கேட்டு வெகுளேன்மின்!
பூ ஆயகொன்றையினானைப் புனல் காழிக்
கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே!

11

கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு
ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவேணுபுரம்
வ.எண் பாடல்
1

நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே.

2

அரவு ஆர் கரவன், அமை ஆர் திரள்தோள
குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே.

3

ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ,
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழிகள்
மேகம் தவழும் வேணுபுரமே.

4

காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து
ஈசர்க்கு இடம் ஆவது இன்நறவ
வாசக்கமலத்து அனம், வன் திரைகள்
வீச, துயிலும் வேணுபுரமே.

5

அரை ஆர் கலை சேர் அனமென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.

6

ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடைமேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலில் நல செங்கயல் கண்
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

8

ஏவும் படை வேந்தன் இராவணனை,
"ஆ" என்று அலற, அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறிமானொடு தண்மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.

9

கண்ணன், கடிமாமலரில் திகழும்
அண்ணல், இருவர் அறியா இறை ஊர்
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.

10

போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார்,
ஆகம் அறியா அடியார் இறைஊர்
மூகம் அறிவார், கலை முத்தமிழ் நூல்
மீ கம் அறிவார், வேணுபுரமே.

11

கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல்
புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புகலி
வ.எண் பாடல்
1

உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!

2

பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்
கண்ணியார், கமழ் கொன்றை சேர் முடிப்
புண்ணியன், உறையும் புகலியை
நண்ணுமின், நலம் ஆன வேண்டிலே!

3

வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்,
பூசும் நீற்றினன், பூம் புகலியைப்
பேசுமின், பெரிது இன்பம் ஆகவே! 3

4

கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்,
பொடி கொள் மேனியன், பூம் புகலியுள
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே!

5

பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,
ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிநகர் தொழ,
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.

6

மறையினான் ஒலி மல்கு வீணையன்,
நிறையின் ஆர் நிமிர்புன்சடையன், எம்
பொறையினான், உறையும் புகலியை
நிறையினால் தொழ, நேசம் ஆகுமே.

7

கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான்,
இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை,
பொரு விடை உயர்த்தான், புகலியைப்
பரவிட, பயில் பாவம் பாறுமே.

8

அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர்
இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!

9

மாலும், நான்முகன்தானும், வார் கழல்
சீலமும் முடி தேட, நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள
பாலது ஆடிய பண்பன் அல்லனே?

10

நின்று துய்ப்பவர், நீசர்தேரர், சொல்
ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியைச்
சென்று கைதொழ, செல்வம் ஆகுமே.

11

புல்லம் ஏறிதன் பூம் புகலியை,
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலைஈர் ஐந்தும் வல்லவர்க்கு,
இல்லை ஆம் வினை, இரு நிலத்துளே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புகலி
வ.எண் பாடல்
1

முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

2

வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்
பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்
புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத்
தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.

3

பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
நா அணவும் அந்தணன் விருப்புஇடம் அது என்பர்
பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,
தே வண விழா வளர் திருப் புகலிஆமே.

4

மை தவழும் மா மிடறன், மாநடம் அது ஆடி,
கை வளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி,
தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே.

5

முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,
செந்நெல் வயல் ஆர்தரு திருப் புகலிஆமே.

6

வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச,
தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.

7

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,
செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.

8

பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர்
நெருக்குஉறு கடல் திரைகள் முத்தம்மணி சிந்த,
செருக்குஉறு பொழில் பொலி திருப் புகலிஆமே.

9

கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்
ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்
தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே.

10

கற்ற மணர், உற்று உலவு தேரர், உரைசெய்த
குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும், மைந்தர், புலன் ஐந்தும்,
செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.

11

செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.

2

தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக்
"காம்!" என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும்
கருணையினான்
"ஓம்" என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.

3

நன் நெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல்,
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும்
பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே!

4

சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத் தவிர்ப்பிக்கும்
கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு!
எத்தனையும்
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை,
நா, நாளும் நன்நியமம் செய்து, சீர் நவின்று ஏத்தே!

5

கண் நுதலான், வெண் நீற்றான், கமழ் சடையான், விடை
ஏறி,
பெண் இதம் ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர்பல
உடையான்,
விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பி
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே.

6

எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு
"இங்கே" என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி,
கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே

7

சிலை அதுவே சிலை ஆகத் திரி புரம் மூன்று எரிசெய்த
இலை நுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன்,
அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி
பணிந்தால்,
நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே.

8

எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு
தாள
நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான்,
உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத்
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே.

9

கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உரு ஆய்
அரியான் ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான்,
தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர
உரியார்தாம் ஏழ் உலகும் உடன் ஆள உரியாரே.

10

உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்;
முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு
உருவன்;
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் உறையும்
சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.

11

தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை
வல்லார்
பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, "எம்பெருமான்!" என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.

2

மொண்டு அலம்பிய வார்திரைக்கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழி,
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய
மாந்தர்தம் வினை
விண்டல் அங்கு எளிது ஆம்; அது நல்விதி ஆமே.

3

நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில்
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி,
"தோடு உலாவிய காது உளாய்! சுரிசங்க வெண்குழையாய்!" என்று என்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே

4

மையின் ஆர் பொழில் சூழ, நீழலில் வாசம் ஆர் மது மல்க, நாள்தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி,
"ஐயனே! அரனே!" என்று ஆதரித்து ஓதி, நீதி உளே
நினைபவர்,
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.

5

மலி கடுந் திரைமேல் நிமிர்ந்து எதிர் வந்து வந்து ஒளிர் நித்திலம் விழ,
கலி கடிந்த கையார் மருவும் கலிக் காழி,
வலிய காலனை வீட்டி மாணிதன் இன் உயிர் அளித்தானை வாழ்த்திட,
மெலியும், தீவினை நோய் அவை; மேவுவர், வீடே.

6

மற்றும் இவ் உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து, வைகலும்,
கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழி,
நெற்றிமேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை
பாடுவார், "வினை
செற்ற மாந்தர்" எனத் தெளிமின்கள், சிந்தையுளே

7

தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ, பயில்
கானலின் விரை சேர விம்மும் கலிக் காழி,
"ஊனுள் ஆர் உயிர் வாழ்க்கையாய்! உறவு ஆகி நின்ற
ஒருவனே!" என்று என்று
ஆனலம் கொடுப்பார், அருள் வேந்தர் ஆவாரே.

8

மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், சாலி சேர் வயல், ஆர, வைகலும்
கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழி
அத்தனே! அரனே! அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய்!
உன கழல்
பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே!

9

பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி உண்ண, மந்திகள்
கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி,
"திருவின் நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர்ச்
செல்வன் ஆகிய
இருவர் காண்பு அரியான்" என ஏத்துதல் இன்பமே.

10

பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர்,
கண்டு சேரகிலார்; அழகு ஆர் கலிக் காழி,
"தொண்டைவாய் உமையோடும் கூடிய வேடனே சுடலைப் பொடி அணி!
அண்டவாணன்!" என்பார்க்கு அடையா, அல்லல் தானே.

11

பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப்
பெயர் பெற்ற ஊர், திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி,
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன்
செந்தமிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புகலி
வ.எண் பாடல்
1

உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.

2

நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்!
ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான் உரி தோல் ஆடையீர்!
போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

3

அழி மல்கு பூம் புனலும், அரவும், சடைமேல் அடைவு எய்த,
மொழி மல்கு மாமறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்!
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி,
எழில் மல்கு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

4

கயில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்! கடிய கரியின்தோல்,
மயில் ஆர்ந்த சாயல் மடமங்கை வெருவ, மெய் போர்த்தீர்!
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதி ஆய் விளங்கும் பைம்புகலி,
எயில் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக இசைந்தீரே.

5

நா ஆர்ந்த பாடலீர்! ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர்!
பா ஆர்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர்! அயன் பேணும்
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி,
தே ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.

6

மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள்
என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்!
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன்புகலி,
கண் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

7

களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரியக் கணை தொட்டீர்!
அளி புல்கு பூ முடியீர்! அமரர் ஏத்த, அருள் செய்தீர்!
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி,
ஒளி புல்கு கோயிலே கோயில் ஆக உகந்தீரே.

8

பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர் கோனை வரைக்கீழ் இட்டு
உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார்
புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி,
வரம் தோன்று கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

9

சலம் தாங்கு தாமரை மேல் அயனும், தரணி அளந்தானும்,
கலந்து ஓங்கி வந்து இழிந்தும், காணா வண்ணம் கனல் ஆனீர்!
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி,
நலம் தாங்கு கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

10

நெடிது ஆய வன் சமணும், நிறைவு ஒன்று இல்லாச் சாக்கியரும்,
கடிது ஆய கட்டுரையால் கழற, மேல் ஓர் பொருள் ஆனீர்!
பொடி ஆரும் மேனியினீர்! புகலி மறையோர் புரிந்து
ஏத்த,
வடிவு ஆரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

11

ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,
அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்,
செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்,
எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
"வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்!" என
ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.

2

ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
"நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா!" என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.

3

வடி கொள் பொழிலில் மழலை வரிவண்டு இசைசெய்ய,
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலிக் காழி,
"முடி கொள் சடையாய்! முதல்வா!" என்று முயன்று ஏத்தி,
அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.

4

மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,
"பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்!" எனப்
பேணி,
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

5

பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக் காழி,
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின், வழுவா வண்ணம்! துயர் போமே.

6

மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி,
"பந்தம் நீங்க அருளும் பரனே!" என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

7

புயல் ஆர் பூமி நாமம் ஓதி, புகழ் மல்க,
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலிக் காழிப்
பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்த
முயல்வார் தம்மேல், வெம்மைக் கூற்றம் முடுகாதே.

8

அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப்
பரக்கும், புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,
பெருக்கும், இன்பம்; துன்பம் ஆன பிணி போமே.

9

மாண் ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரி ஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப்
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி,
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.

10

அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர்,
கஞ்சி காலை உண்பார்க்கு, அரியான்; கலிக் காழித்
தஞ்சம் ஆய தலைவன்; தன்னை நினைவார்கள்,
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.

11

ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

2

கூர் அம்பு அது இலர்போலும்; கொக்கின் இறகு இலர்
போலும்;
ஆரமும் பூண்டிலர் போலும்; ஆமை அணிந்திலர்
போலும்;
தாரும் சடைக்கு இலர்போலும்; சண்டிக்கு அருளிலர்போலும்;
பேரும் பல இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

3

சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்;
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்;
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்;
பித்தவடிவு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

4

நச்சு அரவு ஆட்டிலர் போலும்; நஞ்சம் மிடற்று
இலர்போலும்;
கச்சுத் தரித்திலர்போலும்; கங்கை தரித்திலர்போலும்;
மொய்ச்ச வன்பேய் இலர்போலும்; முப்புரம் எய்திலர்போலும்;
பிச்சை இரந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

5

தோடு செவிக்கு இலர்போலும்; சூலம் பிடித்திலர்போலும்;
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர்போலும்;
ஓடு கரத்து இலர்போலும்; ஒள் அழல் கை இலர்போலும்
பீடு மிகுத்து எழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே.

6

விண்ணவர் கண்டிலர்போலும்; வேள்வி அழித்திலர்போலும்;
அண்ணல் அயன்தலை வீழ, அன்றும் அறுத்திலர்போலும்;
வண்ண எலும்பினொடு அக்குவடங்கள் தரித்திலர்போலும்
பெண் இனம் மொய்த்து எழு செல்வப் பிரமபுரம்
அமர்ந்தாரே.

7

பன்றியின் கொம்பு இலர்போலும்; பார்த்தற்கு
அருளிலர்போலும்;
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர்போலும்;
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

8

பரசு தரித்திலர்போலும்; படுதலை பூண்டிலர் போலும்;
அரசன் இலங்கையர் கோனை அன்றும்
அடர்த்திலர்போலும்;
புரை செய் புனத்து இளமானும், புலியின் அதள்,
இலர்போலும்
பிரசமலர்ப்பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே.

9

அடி முடி மால் அயன் தேட, அன்றும் அளப்பிலர்போலும்;
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர்போலும்;
படி மலர்ப்பாலனுக்கு ஆகப் பாற்கடல் ஈந்திலர்போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

10

வெற்று அரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட
நின்றிலர்போலும்;
அற்றவர், ஆல்நிழல், நால்வர்க்கு அறங்கள்
உரைத்திலர்போலும்;
உற்றவர் ஒன்று இலர்போலும்; ஓடு முடிக்கு இலர்போலும்;
பெற்றமும் ஊர்ந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

11

பெண் உரு ஆண் உரு அல்லாப் பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, வகைவகையாலே,
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள்,
விண்ணவரொடு இனிது ஆக வீற்றிருப்பார், அவர்தாமே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
வ.எண் பாடல்
1

பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.

2

வேணுபுரம், பிரமன் ஊர், புகலி, பெரு வெங்குரு,
வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும்
செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும்
ஊரே.

3

புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி,
நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற
மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்
பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும்
ஊரே.

4

வெங்குரு, தண்புகலி, வேணுபுரம், ச்ண்பை, வெள்ளம்
கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தாய், தொகு பிரமபுரம், தொல்
காழி,
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலி பண்டு ஆண்ட
மூதூர்,
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் - நாம் கருதும்
ஊரே.

5

தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர்
காழி,
இன் நீர வேணுபுரம் பூந்தராய், பிரமன் ஊர், எழில் ஆர்
சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம்
நல்ல
பொன் நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் நாம் புகழும்
ஊரே.

6

தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலை
முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
கருதும் ஊரே.

7

சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம், சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே.

8

புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி,
நறவம் மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன்
தன் ஊர்,
விறல் ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல்
அம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான் தன் கழுமலம் நாம்
சேரும் ஊரே.

9

சண்பை, பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி,
சாயாப்
பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,
பார்மேல்
நண்பு ஆர் கழுமலம், சீர் வேணுபுரம், தோணிபுரம் நாண்
இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த
விமலன் ஊரே.

10

செழு மலிய பூங் காழி, புறவம், சிரபுரம், சீர்ப் புகலி,
செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம்,
சண்பை, ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம்,
மிகு நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்
நுதலான் கருதும் ஊரே.

11

கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு, புறவம்,
காழி,
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி
நம்மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே.

12

காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை
நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால்
பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை
விருப்பு உளாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
வ.எண் பாடல்
1

விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண்
புறவம், மண்மேல்
களங்கம் இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம் கொச்சை,
கழுமலம், என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை
எறிவித்த இறைவன் ஊரே.

2

திரு வளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன் ஊர்,
அயன் ஊர், தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம், சிலம்பன் ஊர், காழி, தகு
சண்பை, ஒண் பா
உரு வளர் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், தோணிபுரம்
உயர்ந்த தேவர்
வெருவ, வளர் கடல்விடம் அது உண்டு அணி கொள்
கண்டத்தோன் விரும்பும் ஊரே.

3

வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன் வாழ் ஊர்,
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி இறை
கொச்சை, அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய
மிக்க(அ)யன் ஊர், அமரர்கோன் ஊர்,
ஆய்ந்த கலை ஆர் புகலி, வெங்குரு அது அரன் நாளும்
அமரும் ஊரே.

4

மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப் புகலி, தராய்,
தோணிபுரம், வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை,
தேவேந்திரன் ஊர், சீர்ப்
பூமகன் ஊர், பொலிவு உடைய புறவம், விறல் சிலம்பன்
ஊர், காழி, சண்பை
பா மருவு கலை எட்டு எட்டு உணர்ந்து, அவற்றின் பயன்
நுகர்வோர் பரவும் ஊரே.

5

தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க் காழி, வயம் கொச்சை,
தயங்கு பூமேல்
விரைச் சேரும் கழுமலம், மெய் உணர்ந்த(அ)யன் ஊர்,
விண்ணவர் தம் கோன் ஊர், வென்றித்
திரைச் சேரும் புனல் புகலி, வெங்குரு, செல்வம் பெருகு
தோணிபுரம், சீர்
உரை சேர் பூந்தராய், சிலம்பன் ஊர், புறவம் உலகத்தில்
உயர்ந்த ஊரே.

6

புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங்
காழி, சண்பை,
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு, புகலி, பூந்தராய்,
தோணிபுரம், சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம், நல் கொச்சை,
வானவர் தம் கோன் ஊர்,
அண்டு அயன் ஊர், இவை என்பர் அருங்கூற்றை
உதைத்து உகந்த அப்பன் ஊரே.

7

வண்மை வளர் வரத்து அயன் ஊர், வானவர் தம் கோன்
ஊர், வண் புகலி, இஞ்சி
வெண் மதி சேர் வெங்குரு, மிக்கோர் இறைஞ்சு சண்பை,
வியன்காழி, கொச்சை,
கண் மகிழும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம்,
பூந்தராய், சீர்ப்
பண் மலியும் சிரபுரம், பார் புகழ் புறவம் பால்வண்ணன்
பயிலும் ஊரே.

8

மோடி புறங்காக்கும் ஊர், புறவம், சீர்ச் சிலம்பன் ஊர்,
காழிமூதூர்,
நீடு இயலும் சண்பை, கழுமலம், கொச்சை, வேணுபுரம்,
கமலம் நீடு
கூடிய(அ)யன் ஊர், வளர் வெங்குரு, புகலி, தராய்,
தோணிபுரம் கூடப் போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற
மலைச்சிலையன் ஊரே.

9

இரக்கம்(ம்) உடை இறையவன் ஊர் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன்தன் ஊர்,
நிரக்க வருபுனல் புறவம், நின்ற தவத்து அயன் ஊர், சீர்த்
தேவர்கோன் ஊர்,
வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசு இலாச் சண்பை, காழி,
கொச்சை,
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர்
வேதம் அறாத ஊரே.

10

மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும் கொச்சை,
இந்திரன் ஊர், மெய்ம்மை
நூல் ஓதும் அயன் தன் ஊர், நுண் அறிவார் குரு, புகலி,
தராய், தூ நீர்மேல்
சேல் ஓடு தோணிபுரம், திகழ் புறவம், சிலம்பன் ஊர்,
செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி, சண்பை
மண்ணோர் வாழ்த்தும் ஊரே.

11

ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை,
கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்
புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி,
வெங்குருவும், என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம் அறியா வகை நின்றான்
தங்கும் ஊரே.

12

அக்கரம் சேர் தருமன் ஊர், புகலி, தராய், தோணிபுரம்,
அணி நீர்ப் பொய்கைப்
புக்கரம் சேர் புறவம், சீர்ச் சிலம்பன் ஊர், புகழ்க் காழி,
சண்பை, தொல் ஊர்
மிக்கர் அம் சீர்க் கழுமலமே, கொச்சை வயம், வேணுபுரம்,
அயன் ஊர், மேல் இச்
சக்கரம் சீர்த் தமிழ்விரகன் தான் சொன்ன தமிழ்
தரிப்போர் தவம் செய்தோரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி அந்தாதி
வ.எண் பாடல்
1

பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர், குறைவு இலாப்
புகலி, பூமேல்
மாமகள் ஊர், வெங்குரு, நல் தோணிபுரம், பூந்தராய்,
வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை,
காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம்
நாம் கருதும் ஊரே.

2

கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த்
தோணிபுரம், கனக மாட
உருத் திகழ் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், உலகு ஆரும்
கொச்சை, காழி,
திருத் திகழும் சிரபுரம், தேவேந்திரன் ஊர், செங்கமலத்து
அயன் ஊர், தெய்வத்
தருத் திகழும் பொழில் புறவம், சண்பை சடைமுடி
அண்ணல் தங்கும் ஊரே.

3

ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு
காழி, கொச்சை,
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த்
தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன் ஊர்,
பூங் கற்பத்
தார் மருவும் இந்திரன் ஊர், புகலி, வெங்குரு கங்கை
தரித்தோன் ஊரே.

4

தரித்த மறையாளர் மிகு வெங்குரு, சீர்த் தோணிபுரம்,
தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி,
இமையோர் கோன் ஊர்,
தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர் திகழ் காழி, சண்பை,
செழுமறைகள் எல்லாம்
விரித்த புகழ்ப் புறவம், விரைக்கமலத்தோன் ஊர் உலகில்
விளங்கும் ஊரே.

5

விளங்கு அயன் ஊர், பூந்தராய், மிகு சண்பை, வேணுபுரம்,
மேகம் ஏய்க்கும்
இளங் கமுகம் பொழில் தோணிபுரம், காழி, எழில் புகலி,
புறவம், ஏர் ஆர்
வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச்சிரபுரம்,
வன் நஞ்சம் உண்டு
களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் காமன்(ன்)
உடலம் காய்ந்தோன் ஊரே.

6

காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர்
கழுமலம், மாத் தோணிபுரம், சீர்
ஏய்ந்த வெங்குரு, புகலி, இந்திரன் ஊர், இருங் கமலத்து
அயன் ஊர், இன்பம்
வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சை,
காழி, சண்பை
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை
கெடுத்தோன் திகழும் ஊரே.

7

திகழ் மாடம் மலி சண்பை, பூந்தராய், பிரமன் ஊர், காழி,
தேசு ஆர்
மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம் கொச்சை,
புறவம், விண்ணோர்
புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு வெம்போர்
மகிடற் செற்று,
நிகழ் நீலி, நின்மலன் தன் அடி இணைகள் பணிந்து
உலகில் நின்ற ஊரே.

8

நின்ற மதில் சூழ்தரு வெங்குரு, தோணிபுரம், நிகழும்
வேணு, மன்றில்
ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர்
புறவம், மோடி
சென்று புறங்காக்கும் ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி,
தேவர் கோன் ஊர்,
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள் தாம் காக்க மிக்க ஊரே.

9

மிக்க கமலத்து அயன் ஊர், விளங்கு புறவம், சண்பை,
காழி, கொச்சை,
தொக்க பொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன் சேர் ஊர்,
மைக் கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு
வல் அரக்கன் திண்தோள்
ஒக்க இருபதும் முடிகள் ஒருபதும் ஈடு அழித்து உகந்த
எம்மான் ஊரே.

10

எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன் ஊர், கழுமலம்,
நல் புகலி, என்றும்
பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன் ஊர்,
நல் தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி, அயன் ஊர், தராய்,
சண்பை காரின்
மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல் ஆய்
விளங்கிய எம் இறைவன் ஊரே.

11

இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
அம்மான் ஊரே.

12

அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம், வெங்குரு,
கொச்சை, புறவம், அம் சீர்
மெய்ம் மானத்து ஒண் புகலி, மிகு காழி, தோணிபுரம்,
தேவர் கோன் ஊர்,
அம் மால் மன் உயர் சண்பை, தராய், அயன் ஊர், வழி
முடக்கும் ஆவின்பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர்,
தக்கோர் தாமே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.

2

வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.

3

சுற்றல் ஆம் நல் புலித்தோல் அசைத்து, அயன்
வெண்தலைத்
துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள
மல் தயங்கு திரள்தோள் எம் மைந்தன் அவன் அல்லனே!

4

பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடை
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர் வண்ணனே.

5

தூ நயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய்,
நா நயம் கொள் மறை ஓதி, மாது ஒருபாகமா,
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே.

6

சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே,
மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன்
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள
பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே.

7

முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர் தொழ,
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும்,
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள
கொடி இலங்கும்(ம்) இடையாளொடும் குடி கொண்டதே!

8

வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள
கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியு
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே,
தொல் இருக்குமறை ஏத்து உகந்து உடன் வாழுமே.

9

மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான் தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.

10

நன்றி ஒன்றும் உணராத வன்சமண், சாக்கியர்,
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான்
கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள
வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே.

11

கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவேணுபுரம்
வ.எண் பாடல்
1

பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

2

சுடுகாடு மேவினீர்! துன்னம் பெய் கோவணம், தோல்
உடை ஆடை அது, கொண்டீர்! உமையாளை ஒருபாகம்
அடையாளம் அது கொண்டீர்! அம் கையினில் பரசு எனும்
படை ஆள்வீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

3

கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்!
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்!
மங்கை ஓர்கூறு உடையீர்! மறையோர்கள் நிறைந்து ஏத்த,
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

4

நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே,
சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து
உரைப்ப,
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே.

5

ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய்
மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

6

மணி மல்கு மால்வரை மேல் மாதினொடு மகிழ்ந்து
இருந்தீர்!
துணி மல்கு கோவணத்தீர்! சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர்!
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச, வேணுபுரத்து
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

7

நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்!
கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன் தனைச் செற்றீர்!
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

8

திரை மண்டிச் சங்கு ஏறும் கடல் சூழ் தென் இலங்கையர்
கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர்! வரை தன்னின்
கரை மண்டிப் பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின்
ஆர்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.

9

தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசை முகன், மால்,
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற(அ)ரிய திருவடியீர்!
பாய் ஓங்கு மரக் கலங்கள் படு திரையால் மொத்துண்டு,
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியாத் திகழ்ந்தீரே.

10

நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள்
புலை ஆனார் அற உரையைப் போற்றாது, உன் பொன்
அடியே
நிலை ஆகப் பேணி, "நீ சரண்!" என்றார் தமை, என்றும்
விலை ஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.

11

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கொச்சைவயம்
வ.எண் பாடல்
1

நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த,
நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள்,
திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு
ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு
கொச்சைவயமே.

2

விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல
விகிர்தத்து உருக் கொள் விமலன்;
சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக
வைத்த சோதி; பதிதான்
மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து
வைகும், வயல்சூழ்,
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும்
வளர்கின்ற, கொச்சைவயமே.

3

பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன்,
இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர்
சோலை, கோலு கனகக்
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது,
கொச்சைவயமே.

4

எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற
சிந்தை முடுகி,
பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற
பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய,
வாளை குழுமிக்
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன
வளர்கின்ற கொச்சைவயமே.

5

பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக்
கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்),
இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர்
தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற
கொச்சைவயமே.

6

புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக
உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த
நகர்தான்
கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார்,
நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு
கொச்சைவயமே.

7


* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

8

மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன்
முடியோடு தோள்கள் நெரிய,
பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு
உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும்
ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி
தேடு கொச்சைவயமே.

9

வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது
உண்ட மாலும், இகலி,
"கண்டிட ஒண்ணும்" என்று கிளறி, பறந்தும், அறியாத
சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை
தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு
கொச்சைவயமே.

10

கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு
சீவரத்தின் உடையார்,
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து
உருக் கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று
மலர,
செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு
கொச்சைவயமே.

11

இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள்
ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா
இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா
இருப்பது அறிவே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கொச்சைவயம்
வ.எண் பாடல்
1

அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே.

2

சுண்ணத்தர்; தோலொடு நூல் சேர் மார்பினர்; துன்னிய
பூதக்
க(ண்)ணத்தர்; வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்று ஆடுவர்
கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர், மால் எரி
ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.

3

பாலை அன்ன வெண் நீறு பூசுவர்; பல்சடை தாழ,
மாலை ஆடுவர்; கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம் வெண் திரை கரை மிசை
விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சை வயம் அமர்ந்தாரே.

4

கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு
அணிவர்;
பொடிகள் பூசிய மார்பின் புனைவர்; நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி, சங்கின் ஒலியொடு, கலை ஒலி,
துதைந்து,
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

5

ஆடல் மா மதி உடையார்; ஆயின பாரிடம் சூழ,
வாடல் வெண்தலை ஏந்தி, வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மடமஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.

6

மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்; தொல்வரை வில் அது ஆக,
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள,
விடைமேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம்
அமர்ந்தாரே.

7


* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

அன்று அ(வ்) ஆல் நிழல் அமர்ந்து அற உரை
நால்வர்க்கு அருள
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது, பொருகடல்
இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

9

சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
அமர்ந்தாரே.

10

குண்டர், வண் துவர் ஆடை போர்த்தது ஒர்
கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல; மை அணி கண்டர்,
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர்,
ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

11

கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.

2

தேவர் தானவர் பரந்து, திண் வரை மால் கடல் நிறுவி,
நா அதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
"ஆவ!" என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன்நகரே.

3

கரியின் மா முகம் உடைய கணபதி தாதை, பல்பூதம்
திரிய இல் பலிக்கு ஏகும் செழுஞ்சுடர், சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி,
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன்நகரே.

4

சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வான் இடை
மிடைந்து,
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே.

5

மங்கை கூறு அமர் மெய்யான், மான்மறி ஏந்திய கையான்,
எங்கள் ஈசன்! என்று எழுவார் இடர்வினை கெடுப்பவற்கு
ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து, தகுதியின் மிக்க
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன்நகரே.

6

நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்,
ஏறும் ஏறிய ஈசன், இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றித்
தேறுவார்கள், சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன்நகரே.

7

நடம் அது ஆடிய நாதன், நந்திதன் முழவு இடைக்
காட்டில்;
விடம் அமர்ந்து, ஒரு காலம், விரித்து அறம் உரைத்தவற்கு
ஊர் ஆம்
இடம் அதா மறை பயில்வார்; இருந்தவர், திருந்தி அம்
போதிக்
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய, காழி நன்நகரே.

8

கார் கொள் மேனி அவ் அரக்கன் தன் கடுந் திறலினைக்
கருதி,
ஏர் கொள் மங்கையும் அஞ்ச, எழில் மலை எடுத்தவன்
நெரிய,
சீர் கொள் பாதத்து ஒர்விரலால் செறுத்த எம் சிவன் உறை
கோயில்
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண்வயல் காழி நன்
நகரே.

9

மாலும் மா மலரானும் மருவி நின்று, இகலிய மனத்தால்,
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர் தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய,
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி, வயல் காழி நன் நகரே.

10

புத்தர், பொய் மிகு சமணர், பொலி கழல் அடி இணை
காணும்
சித்தம் மற்று அவர்க்கு இலாமைத் திகழ்ந்த நல்
செழுஞ்சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர், செறிந்த நல்மாமலர் கொண்டு,
"முத்தனே, அருள்!" என்று முறைமை செய் காழி நன்நகரே.

11

ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு...........

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி - திருவிராகம்
வ.எண் பாடல்
1

நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர்,
அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை
நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!

2

பாவம் மேவும் உள்ளமோடு, பத்தி இன்றி, நித்தலும்
ஏவம் ஆன செய்து, சாவதன் முனம் இசைந்து நீர்,
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி, நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே!

3

சோறு கூறை இன்றியே துவண்டு, தூரம் ஆய், நுமக்கு
ஏறு சுற்றம் எள்கவே, இடுக்கண் உய்ப்பதன் முனம்
ஆறும் ஓர் சடையினான், ஆதி யானை செற்றவன்,
நாறு தேன் மலர்ப்பொழில் நலம் கொள் காழி சேர்மினே!

4

நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல, "நாளையும்
உச்சி வம்!" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர், நச்சு அரவு அரைப் பெரிய சோதி, பேணுவார்
இச்சை செய்யும் எம்பிரான், எழில் கொள் காழி சேர்மினே!

5

கண்கள் காண்பு ஒழிந்து, மேனி கன்றி, ஒன்று அலாத
நோய்
உண்கிலாமை செய்து, நும்மை உய்த்து அழிப்பதன் முனம்
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுது செய்,
கண்கள் மூன்று உடைய, எம் கருத்தர் காழி சேர்மினே!

6

அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து, நீர்,
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்) மினோ!
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்,
கொல்லை ஏறு அது ஏறுவான், கோலக் காழி சேர்மினே!

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லும் நீர்
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம்
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன்,
பை மிகுத்த பாம்பு அரைப் பரமர், காழி சேர்மினே!

9

காலினோடு கைகளும் தளர்ந்து, காம்நோய்தனால்
ஏல வார்குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே!

10

நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள்
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவ தன் முனம்
தலை பறித்த கையர், தேரர், தாம் தரிப்ப(அ)ரியவன்;
சிலை பிடித்து எயில் எய்தான்; திருந்து காழி சேர்மினே!

11

தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை,
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்,
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருச்சிரபுரம்
வ.எண் பாடல்
1

அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.

2

கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள
ஆமை,
சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல்
விடம் உண்ட
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை
நில்லாவே.

3

மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட
மதித்து, அன்று,
கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு,
அருள்புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து
உறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள்,
குறுகாவே.

4

மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக் காலனை உதை
செய்தார்,
பேணி உள்கும் மெய் அடியவர் பெருந் துயர்ப் பிணக்கு
அறுத்து அருள் செய்வார்,
வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்து
அமர்கின்ற
ஆணிப்பொன்னினை, அடி தொழும் அடியவர்க்கு
அருவினை அடையாவே.

5

பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி, ஆகாசம்,
ஓரும் வாயுவும், ஒண்கனல், வேள்வியில் தலைவனும் ஆய்
நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல்
கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர்
வருந்தாரே.

6

ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள்
அவை மூட,
"ஆழி, எந்தை!" என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து
உயர்ந்தார் தாம்,
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன்,
எம்பெருமானார்,
வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை
அடையாவே.

7

பேய்கள் பாட, பல்பூதங்கள் துதிசெய, பிணம் இடு
சுடுகாட்டில்,
வேய் கொள் தோளிதான் வெள்கிட, மா நடம் ஆடும்
வித்தகனார்; ஒண்
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்
தாம்;
தாய்கள் ஆயினார், பல் உயிர்க்கும்; தமைத் தொழுமவர்
தளராரே.

8

இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் கொள்
வெற்பு எடுத்து, அன்று,
கலங்கச் செய்தலும், கண்டு, தம் கழல் அடி நெரிய வைத்து,
அருள் செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்று அதன்
இடைப் புகுந்து ஆரும்,
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ, வினை
குறுகாவே.

9

வண்டு சென்று அணை மலர்மிசை நான்முகன், மாயன்,
என்று இவர் அன்று
கண்டு கொள்ள, ஓர் ஏனமோடு அன்னம் ஆய், கிளறியும்
பறந்தும், தாம்
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி; பரமேட்டி;
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுது எழ, வினை அவை
கூடாவே.

10

பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத்
துவர் தோய்ந்த
செறித்த சீவரத் தேரரும், தேர்கிலாத் தேவர்கள்
பெருமானார்
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட, இள
வாளை
வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ, வினை விட்டிடும்,
மிகத் தானே.

11

பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை, பை அரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை, நித்திலப்
பெருந்தொத்தை,
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை, விண்ணவர்
பெருமானை,
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
சீகாழி
வ.எண் பாடல்
1

பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள்(ள்), இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க(வ்) எறி வார் திரைக்
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே.

2

மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான், அருந்
தொண்டர்கள்
அயல் இலங்கப் பணி செய்ய நின்ற(வ்) அடிகள்(ள்), இடம்
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே,
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே.

3

கூர்வு இலங்கும் திருசூலவேலர், குழைக் காதினர்,
மார்வு இலங்கும் புரிநூல் உகந்த(ம்) மணவாளன், ஊர்
நேர் விலங்கல்(ல்) அன திரைகள் மோத(ந்), நெடுந்
தாரைவாய்க்
கார் விலங்கல்(ல்) எனக் கலந்து ஒழுகும் கடல் காழியே.

4

குற்றம் இல்லார், குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர்,
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான், இடம்
மற்று நல்லார், மனத்தால் இனியார், மறை கலை எலாம்
கற்று நல்லார், பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே.

5

விருது இலங்கும் சரிதைத் தொழிலார், விரிசடையினார்,
எருது இலங்கப் பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத, பிழை கேட்டலால்,
கருது கிள்ளைக்குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே.

6

தோடு இலங்கும் குழைக் காதர், வேதர், சுரும்பு ஆர்
மலர்ப்
பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடம் ஆவது
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க, பெருஞ்
செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே.

7

மலை இலங்கும் சிலை ஆக வேக(ம்) மதில் மூன்று எரித்து
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த(வ்)அடிகட்கு இடம்
இலை இலங்கும் மலர்க்கைதை கண்டல் வெறி விரவலால்,
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே.

8

முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கைக்
கோன்
அழுது இரங்க, சிரம் உரம் ஒடுங்க(வ்) அடர்த்து, அங்கு
அவன்
தொழுது இரங்கத் துயர் தீர்த்து, உகந்தார்க்கு இடம் ஆவது
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே.

9

பூவினானும், விரிபோதில் மல்கும் திருமகள் தனை
மேவினானும், வியந்து ஏத்த, நீண்டு ஆர் அழல் ஆய்
நிறைந்து
ஓவி, அங்கே அவர்க்கு அருள் புரிந்த(வ்) ஒருவர்க்கு இடம்
காவி அம் கண் மடமங்கையர் சேர் கடல் காழியே.

10

உடை நவின்றார், உடை விட்டு உழல்வார், இருந் தவத்தார்
முடை நவின்ற(ம்) மொழி ஒழித்து, உகந்த(ம்) முதல்வன்(ன்)
இடம்
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர,
கடை நவின்ற(ந்) நெடுமாடம் ஓங்கும் கடல் காழியே.

11

கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியு
உரகம் ஆரும் சடை அடிகள் தம்பால் உணர்ந்து
உறுதலால்,
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு, இசை
ஆர் தமிழ்
விரகன் சொன்ன இவை பாடி ஆட, கெடும், வினைகளே

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புகலி
வ.எண் பாடல்
1

விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள்
தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.

2

வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்,
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச்
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே.

3

வண்டு வாழும் குழல் மங்கை ஓர் கூறு உகந்தார், மதித்
துண்டம் மேவும் சுடர்த் தொல்சடையார்க்கு இடம் ஆவது
கெண்டை பாய மடுவில்(ல்), உயர் கேதகை, மாதவி,
புண்டரீகம்மலர்ப் பொய்கை நிலாவும் புகலியே.

4

திரியும் மூன்று புரமும்(ம்) எரித்து, திகழ் வானவர்க்கு
அரிய பெம்மான், அரவக் குழையார்க்கு இடம் ஆவது
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால், வெயில்
புரிவு இலாத தடம் பூம்பொழில் சூழ் தண் புகலியே.

5

ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன் அருள் செய்தவர்,
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ, வாளை போய்ப்
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே.

6

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், தையலாளொடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும்(ம்) இடம் ஆவது
கொக்கு, வாழை, பலவின் கொழுந் தண் கனி,
கொன்றைகள்,
புக்க வாசப்புன்னை, பொன்திரள் காட்டும் புகலியே.

7


* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

தொலைவு இலாத அரக்கன்(ன்) உரத்தைத் தொலைவித்து,
அவன்
தலையும் தோளும் நெரித்து சதுரர்க்கு இடம் ஆவது
கலையின் மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்பு
இலார்,
பொலியும் அம் தண்பொழில் சூழ்ந்து அழகு ஆரும்
புகலியே.

9

கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னம் ஆய்க்
"காண்டும்" என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது
நீண்ட நாரை இரை ஆரல் வார, நிறை செறுவினில்
பூண்டு மிக்க(வ்) வயல் காட்டும் அம் தண் புகலியே.

10

தடுக்கு உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு, சாக்கியர்,
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது
மடுப்பு அடுக்கும் சுருதிப்பொருள் வல்லவர், வான் உளோர்,
அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே.

11

எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.