திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங்காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலை, ஓர் வல்லியின் ஒல்கி, அன நடை வாய்ந்து,
உருவளர் காமன்தன் வென்றிக்கொடி போன்று? ஒளிர்கின்றதே,
மதிவாள் நுதல் வளர் வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது.